Last Updated : 16 Oct, 2020 05:41 PM

1  

Published : 16 Oct 2020 05:41 PM
Last Updated : 16 Oct 2020 05:41 PM

உயிருடன் பிரேத குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு; உயிருடன் இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் அளித்த தனியார் மருத்துவமனையிடம் விசாரணை

உயிருடன் இருக்கும்போதே பிரேத குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த முதியவர்.

சேலம்

சேலத்தில் உயிரோடு பிரேத குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முதியவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவர் உயிருடன் இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் வழங்கிய தனியார் மருத்துவமனையிடம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 24-வது கோட்டம், கந்தம்பட்டியில் உள்ள பழைய ஹவுசிங் போர்ட் பகுதியில் வசிப்பவர் சரவணன் (70). இவரது அண்ணன் பாலசுப்ரமணிய குமார் (74). இவர் உடல்நிலை பாதித்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் உடல்நிலையில் முன்னேற்றம் அடையாததால், அவரை சரவணன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அண்ணன் பாலசுப்ரமணிய குமார் இறந்துவிட்டதாக நினைத்த சரவணன், அவரைப் பிரேத குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைத்தார். குளிர்சாதனப் பெட்டியைத் திரும்ப எடுக்க வந்த பணியாளர்கள், பெட்டிக்குள் உயிருடன் இருந்த பாலசுப்ரமணிய குமாரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து, சூரமங்கலம் போலீஸார் சரவணன் மீது அஜாக்கிரதையாகவும், முரட்டுத்தனமாக இயந்திரத்தைப் பயன்படுத்தி காயம் ஏற்படுத்தியதற்காகவும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலசுப்ரமணிய குமார் இன்று (அக். 16) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்து, தம்பியிடம் ஒப்படைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உயிருடன் இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் - தனியார் மருத்துவமனையிடம் விசாரணை

சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலசுப்ரமணிய குமார் உடல்நிலை மோசமானதை அடுத்து, சரவணன் அழைத்து வந்துள்ளார். மீண்டும் தனியார் மருத்துவமனைக்குக்குச் சென்ற சரவணன், பாலசுப்ரமணியகுமார் இறந்து விட்டதாகவும், உடலை எரிக்க இறப்புச் சான்றிதழ் வேண்டும் என்று மருத்துவர்களிடம் கேட்டுள்ளார். பாலசுப்ரமணிய குமார் இறந்தாரா, உயிருடன் உள்ளாரா என்று பரிசோதனை செய்யாமலேயே தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் இறப்புச் சான்றிதழ் அளித்துள்ளனர்.

இது சம்பந்தமாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மலர்விழி தலைமையிலான குழுவினர் தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று, பாலசுப்ரமணிய குமார் உயிருடன் இருக்கும்போதே, அவருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கியது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை முடிந்ததும், அதன் அறிக்கையை இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x