Published : 16 Oct 2020 07:56 AM
Last Updated : 16 Oct 2020 07:56 AM

மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவாகிறது: அமலாக்கத் துறை விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட வாய்ப்பு

வேலூர் மண்டல மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பன்னீர்செல்வம் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், சொத்து ஆவணங்களை ட்ரங்க் பெட்டியில் வைத்து எடுத்துச் செல்லும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார்.

வேலூர்

வேலூர் மண்டல மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சுற்றுச் சூழல் பொறியாளராக பணியாற்றி வந்தவர் பன்னீர்செல்வம் (57). இவர், மாதாந்திர ஆய்வுக்கூட்டத்தில் கோப்புகள் மீது கையெழுத்திட லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில், வேலூர் லஞ்சஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான குழுவினர் பன்னீர்செல்வம் தங்கியிருந்த வீட்டில் கடந்த 13-ம் தேதி இரவு நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.33.73 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், ராணிப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நேற்றுமுன்தினம் காலை சோதனையை தொடங்கினர். அப்போது, மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.3.25கோடி ரொக்கம், 3.60 கிலோ எடையுள்ள தங்க நகைகள், ஆறரை கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.100 கோடி மதிப்பிலான 90அசையா சொத்துகளின் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் தொடங்கிய சோதனை நேற்று காலை 7 மணியளவில் முடிந்தது. பன்னீர்செல்வம் வீட்டில் பறிமுதல் செய்த பணம், நகைகளை வேலூர் அரசு கருவூலத்தில் நேற்று ஒப்படைத்தனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது: பன்னீர்செல்வம் வீட்டில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எத்தனை வங்கிகளில் லாக்கர் வசதி உள்ளது என்பதை விசாரித்த பிறகு அதை திறந்து பார்க்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக பன்னீர்செல்வத்தை விரைவில் விசாரணைக்கு அழைப்போம்.

அதேபோல், வேலூர் மண்டலத்தில் பணியாற்றும் அனைத்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களையும் அழைத்து விசாரிப்போம். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள், சொத்து ஆவணங்களின் அடிப்படையில் அரசின் அனுமதியுடன் பன்னீர்செல்வத்தின் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விரைவில் பதிவு செய்யப்படும்.

அப்போது, மீண்டும் ஒரு சோதனை நடத்தப்படும். பன்னீர்செல்வத்திடம் இருந்து அதிகபட்ச அளவு பணம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் தேவைப்படும் பட்சத்தில் அமலாக்கத் துறை விசாரணை தொடர்பாக பரிந்துரை செய்யவும் வாய்ப்புள்ளது’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x