Published : 13 Oct 2020 05:50 PM
Last Updated : 13 Oct 2020 05:50 PM
பொதுவாக கிரிக்கெட் விளையாட்டு வெகுஜன மக்களை ஈர்த்திருப்பது அனைவரும் அறிந்ததே. அதுவும் ஐபிஎல் அறிமுகமானதற்குப் பின் கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் ரசிகர்கள் உண்டு. குறிப்பாக, தோனியாலேயே சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்களும் உண்டு. குக்கிராமங்களிலும் தோனிக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே என்று கூறுவதைக் காட்டிலும் தீவிர ரசிகர்கள் உண்டு என்றே கூறலாம். அந்த அளவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதும், கேப்டன் தோனி மீதும் வெறித்தனமாக உள்ளனர்.
அதை மெய்ப்பிக்கும் வகையில் கடலூர் மாவட்டம் மேற்குப் பகுதியான திட்டக்குடியை அடுத்த குக்கிராமமான அரங்கூரில் கோபிகிருஷ்ணா என்ற கிரிக்கெட் ரசிகர் தனது வீட்டை மஞ்சள் வண்ணத்திற்கு மாற்றியிருப்பதோடு, தோனி ரசிகரின் வீடு என எழுதி, சிஎஸ்கே அணியின் மீதான ஈர்ப்பையும், தோனியின் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி-விஜயா தம்பதியரின் மகன் கோபிகிருஷ்ணன். சிறு வயது முதலே கிரிக்கெட் விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்ட கோபிகிருஷ்ணா, குடும்பச் சூழல் காரணமாக பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கடந்த 2008-ம் ஆண்டு வேலைவாய்ப்புக்காக துபாய் சென்றார். வெளிநாட்டில் இருந்த போதிலும் அங்கு 20 பேர் கொண்ட அணியில் இணைந்து கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். ஐபிஎல் போட்டிக்குப் பின்னர் சென்னை அணியின் தீவிர ரசிகராக மாறியுள்ளார்.
இந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர், ஐபிஎல் போட்டியைக் காண ஆர்வமுடன் இருந்துள்ளார். கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி, சிஎஸ்கே அணி இரு வெற்றிகளைப் பெற்ற நிலையில், தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்ததால், அணி மீதும், கேப்டன் தோனி மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழத் தொடங்கியதால், தோனி தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தனது வீட்டை மஞ்சள் வண்ணத்திற்கு மாற்றி, தோனி ரசிகரின் இல்லம் என எழுதி, தோனியின் படத்தையும் வரைந்துள்ளார்.
இது தொடர்பாக கோபிகிருஷ்ணாவிடம் பேசியபோது, "சிறுவயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வமுண்டு. குறிப்பாக, ஐபிஎல் போட்டிக்குப் பின் தீவிர கிரிக்கெட் ரசிகனாக மாறினேன். வெளிநாட்டில் இருந்தாலும் தோனி விளையாடும் ஆட்டத்தைக் காணத் தவறுவதில்லை.
இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சில தோல்விகளைச் சந்தித்ததால், அணியும், 'தல' தோனியும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர். விளையாட்டில் வெற்றி - தோல்வி சகஜம். தோனியைப் பொறுத்தவரை அவர் சிறந்த ஆட்டக்காரர். அவர் மீதான விமர்சனம் தேவையற்றது. எனவேதான் அவருக்கும், தோனியின் ரசிகர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக 10 தினங்களுக்கு முன் ரூ.1.5 லட்சம் செலவில் வீட்டின் வண்ணத்தை சிஎஸ்கே அணியின் நிறத்திற்கு மாற்றியமைத்தேன்.
இருப்பினும், தோனியின் முக அமைப்பைத் துல்லியமாக வரையக்கூடிய ஓவியர் கிடைப்பது சற்று தாமதமானது. தற்போது அதுவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது. தற்போது பலரும் வீட்டைப் பார்த்துவிட்டு. நேர்மறையான கருத்துகளைத் தெரிவித்துவிட்டு, ’தல தல தான்’ பாராட்டி வருகின்றனர்.
எங்கள் வீட்டில் அனைவரும் தோனியின் ரசிகர்கள். தோனி விளையாடும் விளையாட்டை அனைவருமே பார்ப்போம். எனக்குத் தனிப்பட்ட முறையிலும் தோனியைப் பிடிக்கும் என்பதால் எனது மகனுக்கு தோனியின் பெயரை வைக்க முடிவெடுத்தேன். ஆனால், வீட்டில் உள்ளவர்கள் எண் கணிதப்படி வைக்க வேண்டும் என்பதால், அவரது பெயரை வைக்க முடியாமல் போனது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT