Published : 13 Oct 2020 10:14 AM
Last Updated : 13 Oct 2020 10:14 AM

திருமணமான 5 மாதங்களில் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்: திருப்பத்தூர் சார் ஆட்சியர் விசாரணை

சத்யா (கோப்புப்படம்).

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் திருமணமான 5 மாதங்களில் குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

திருப்பத்தூர் மாவட்டம் பஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி உதயகுமார் (27). இவருக்கும், சின்னகோணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சத்யா (21) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடந்த சில நாட்களில் தம்பதி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. உதயகுமார் தனது மனைவி சத்யாவிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த உதயகுமார் மீண்டும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சத்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்யா உயிரிழந்த தகவலை அவரது பெற்றோரிடம் உதயகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சத்யா உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், வரதட்சணை கேட்டு சத்யாவை அவரது கணவர் உதயகுமார் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், சத்யா தூக்கிட்டு தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் சத்யாவின் பெற்றோர் நேற்று புகார் அளித்தனர்.

அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சத்யாவுக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் வழக்கை சார் ஆட்சியர் (பொறுப்பு) அப்துல்முனீருக்கு மாற்றினர். அதன்பேரில், உதயகுமார் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x