Published : 12 Oct 2020 11:11 AM
Last Updated : 12 Oct 2020 11:11 AM
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் போடும் பெட்டி இன்று மரத்தடிக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 7 மாதங்களாக கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதனால், இலவச பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு, வங்கி கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வரும் பொதுமக்களுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதியில் மனுக்களை சேகரிக்க பெட்டி ஒன்று வைக்கப்பட்டது.
பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க வரும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அப்பேட்டியில் இட்டுச் செல்வது வழக்கம். பின்னர் அதில் உள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுவந்தது.
ஆனால் இன்று காலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் நியாய விலை கடை தொடக்கவிழா பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடக்க இருந்தது.
அத்துடன் தமிழக முதல்வர் பழனிசாமி வருகைக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் மனுக்கள் போடும் பெட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு மூலையில் மரத்தடிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனைக் கண்ட மனு கொடுக்க வந்த பொதுமக்கள் ஓரங்கட்டப்பட்ட பெட்டியில் போடும் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற சந்தேகத்துடனே தங்கள் கோரிக்கை மனுக்களை மரத்தடியில் உள்ள பெட்டியில் போட்டுச் சென்றனர். சிலர் மனுக்களை அதில் போடாமல் திரும்பவும் எடுத்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT