Published : 12 Oct 2020 07:39 AM
Last Updated : 12 Oct 2020 07:39 AM

தேசிய கட்சிகள் இடம் பெற்றாலும் தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்

மதுரையில் அம்மா கிச்சன் தொடங்கி நூறு நாள் சாதனை நிகழ்ச்சியையொட்டி அங்கு சமைத்த உணவை ஆய்வு செய்த அமைச்சர் ஆர்பி. உதயகுமார், ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்று அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தெரிவித்தார்.

மதுரையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு ஜெயலலிதா பேரவை, அம்மா சேரிடபிள் டிரஸ்ட், மதுரைமாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து மூன்று வேளைசத்தான உணவு வழங்கி வருகின்றன.

இதற்காக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் ஏற்பாட்டின்பேரில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் அம்மாகிச்சன் என்ற பெயரில் உணவு தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இதன் நூறாவது நாள் சாதனை நிகழ்ச்சி தொழில் வர்த்தக சங்கத்தில் நேற்று நடந்தது.

இதில் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் பேசியதாவது: அதிமுகவில் ஒரு நேரத்தில் பூத் கமிட்டி பதவிக்குப் போராடியவன் நான். தற்போது 3 துறைகளுக்கு அமைச்சராக உள்ளேன். இதற்குக் காரணம் உழைப்பு.

கட்சி வழிகாட்டுக் குழுவில் மதுரையைச் சேர்ந்த 2 பேர் இடம் பெற்றுள்ளனர். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மக்களிடம் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் திராவிட கட்சிகள் தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும். அதிமுக, திமுகவில் இதுதான் நடைமுறை.

அதிமுகவில் வழிகாட்டுதல் குழுவுக்கான அதிகார விதிகள் வகுக்கப்பட்ட பிறகே குழு முழுமையாக செயல்படும் என்றார்.

நிகழ்ச்சியில் மதுரை மாவட்டஆட்சியர் டிஜி. வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன், முன்னாள் எம்எல்ஏ தமிழரசன், மாவட்டப் பொருளாளர் திருப்பதி, ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலர் வெற்றிவேல், மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைசெயலர் ஆர்யா, வழிகாட்டுக் குழுஉறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையொட்டி தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை அமைச்சர், வழிகாட்டுக் குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோர் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x