Published : 11 Oct 2020 10:33 AM
Last Updated : 11 Oct 2020 10:33 AM

தமிழகத்தில் எனது பெயரை அழிக்க முடியுமா? - திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கேள்வி

ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை அரசினர் பள்ளி நுழைவு வாயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசும் திமுக பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான துரைமுருகன். அருகில், எம்பி கதிர்ஆனந்த், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், ஆர்.காந்தி உள்ளிட்டோர்.

ராணிப்பேட்டை

அரசுப் பள்ளி நுழைவு வாயிலில் எனது பெயரை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தவர்கள் தமிழகத்தில் நான் கட்டிய 40 அணைகள், 9 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் எனது பெயரை அழித்துவிட முடியுமா? என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப் பேட்டை அருகேயுள்ள லாலாபேட்டை அரசுப் பள்ளியில் ரூ.5 லட்சத்தில் நூற்றாண்டு நினைவு நுழைவு வாயில், ரூ.7.50 லட்சத்தில் பள்ளி சுற்றுச்சுவர் புதிதாக கட்டப்பட்டுள்ளது. காட்பாடி சட்டப்பேரவை தொகுதி திமுக உறுப்பினரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இவை கட்டப்பட்டுள்ளன.

இந்த புதிய நுழைவு வாயிலில் ‘நிதியுதவி மாண்புமிகு துரைமுருகன்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டி ருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கடந்த 8-ம் தேதி பிரச்சினையில் ஈடுபட்டனர். அங்கு வந்த திமுகவினருடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர். பின்னர், பெயர் பலகையை அகற்ற வேண்டும் எனக் கோரி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் மனு அளித்துள்ளனர். இதையடுத்து, சர்ச்சைக்குரிய பெயர்ப் பலகை மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டது.

பள்ளியின் நுழைவு வாயில் திறப்பு விழா நேற்று முன்தினம் (9-ம் தேதி) இரவு நடைபெற இருந்த நிலையில் பெயரின் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்த சம்பவம் திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே திட்டமிட்டபடி, திமுக பொதுச் செயலாளரும் காட்பாடி தொகுதி திமுக எம்எல்ஏவுமான துரைமுருகன், நுழைவு வாயில் திறப்பு விழாவுக்குச் சென்றபோது, திமுகவினர் அவரை திரளாக வர வேற்றனர்.

அப்போது, ஸ்டிக்கர் ஒட்டிய பெயர்ப் பலகையை துரைமுருகனிடம் காண்பித்து திமுக நிர்வாகிகள் விளக்கிக்கூறினர். பின்னர், நுழைவு வாயில் மீது ஏணி வைத்து ஏறி ஒரு நபர் ஸ்டிக்கரை அகற்றினார்.

 பள்ளி நுழைவு வாயிலில் துரைமுருகனின் பெயரை மறைத்து ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றிய திமுக தொண்டர்.

தொடர்ந்து, நுழைவு வாயிலை துரைமுருகன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் பேசும்போது, ‘‘இன்னும் நான்கு மாதங்களில் ஆட்சி மாறப்போகிறது. திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் பொதுப்பணித்துறை அமைச்சராக அமர்ந்தால் அவரது பெயரை இங்கு ஸ்டிக்கர் ஒட்டி மறைத்த அதிகாரி வீட்டுக்கு போகத் தயாராக இருக்க வேண்டும். தைரியம் இருந்தால் பிரித்த ஸ்டிக்கரை மீண்டும் ஒட்டிப் பாருங்கள் பார்க்கலாம்’’ என ஒருமையில் பேசினார்.

ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான ஆர்.காந்தி பேசும்போது, ‘‘கரோனா காலத்தில் கொள்ளையடித்த பணத்தில் தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்று கனவு காண்கின்றனர். ஆனால் அது நடக்காது. மக்கள் தற் போது தெளிவாக உள்ளனர்’’ என்றார்.

நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசும் போது, ‘‘இந்த நுழைவு வாயிலில் மட்டும்தான் எனது பெயரை அழிக்க முடியும். மக்களால் நான் எம்எல்ஏ வாக தேர்வு செய்யப்பட்டு 46 ஆண்டுகாலம் சட்டப் பேரவையில் உறுப்பினராக இருந்து வருகிறேன். தமிழகத்தில் 40 அணைகள், 9 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டியுள்ளேன். அங்கெல்லாம் எனது பெயரை அழித்துவிட முடியுமா?

‘வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா’

ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக பொறுப் பேற்றுள்ள இளம் வயது ஆட்சியரிடம் இந்தப் பிரச்சினை குறித்து நான் பேசினேன். அவர் நேர்மையான அதிகாரி என்று கேள்விப்பட்டுள்ளேன். திறப்பு விழாவை முடித்துவிடுகிறேன் என்று கேட்டேன். அவரும் சரி என்றவர் எனது பெயரை ஸ்டிக்கர் ஒட்டி ஏன் மூடி மறைத்தார் என்று தெரியவில்லை. பாரதி சொன்னபடி ‘வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா’ என்பது போல் மாவட்ட ஆட்சியர் வாக்கு தவறிவிட்டார். இதனால், அவர் மீது கொஞ்சம் மதிப்பு குறைந்து விட்டது.

இந்தத் தொகுதியில் எனக்கு வாக்களித்தவர்கள், வாக்கு அளிக் காதவர்கள் என அனைவரும் எனது வாக்காளர்கள் தான். அதேபோல் தான் எங்களுக்கும், உங்களுக்கும் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் முதலமைச்சர் யார் என்றால் எடப்பாடி பழனிசாமி தான். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை’’ என்றார்.

இதில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x