Published : 10 Oct 2020 12:03 PM
Last Updated : 10 Oct 2020 12:03 PM
பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி முகக்கவசம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டதாக, திருப்பரில் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு பிரபல நிறுவனம் செயல்படுகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களும் முகக் கவசத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக, மேற்குறிப்பிட்ட பிரபல நிறுவனமும் முகக் கவசங்களை தயாரித்து விற்பனை செய்கிறது. கடந்த 28-ம் தேதி முகநூல் பக்கத்தில் சீனு என்பவர், குறைந்த விலையில் மேற்கண்ட பிரபல நிறுவனத்தின் முகக் கவசம் கிடைக்கும் என பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த நிறுவன ஊழியர்கள், உரிமையாளருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து முகநூலில் பதிவிட்ட சீனுவை நிறுவன ஊழியர்கள் தொடர்பு கொண்டனர். மேலும், போலியாக தரமற்ற முறையில் மாஸ்க் தயாரிக்கும் நேர்மைநாதன் என்பவரையும் அணுகியுள்ளனர். தற்போது ஸ்டாக் இல்லை என்றும், அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும், சில நாட்களில் தயார் செய்து தருவதாகவும் ஊழியர்களிடம் கூறியுள்ளனர். நேற்று முன்தினம் முகக் கவசங்கள் தயாராகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கே.வி.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது கிடங்குக்கு சென்று பார்த்தபோது, பிரபல நிறுவனத்தின் முத்திரையுடன் முகக் கவசங்கள் போலியாக தயாரித்துவைக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக திருப்பூர் மாநகர் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக திருப்பூர் கொங்கு பிரதான சாலை எம்.எஸ்.நகர் சீனு (30), கே.வி.ஆர். நகரைசேர்ந்த நேர்மைநாதன் (32) மற்றும் பிரபல நிறுவனத்தின் லோகோவை போலியாக பிரிண்ட் செய்த மாஸ்கோ நகர் முருகன் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 437 முகக் கவசங்கள், 1532 லோகோ ஸ்டிக்கர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT