Published : 06 Oct 2020 08:08 AM
Last Updated : 06 Oct 2020 08:08 AM
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்|வம் கடந்த 3 நாட்களாக பெரியகுளத்தில் தங்கி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். நேற்று அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பிற்பகலில் காரில் சென்னைக்கு கிளம்பிச் சென்றார்.
முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிமுகவில் கருத்து மோதல் உருவாகி உள்ளது. முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. இதற்கிடையே, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 3-ம் தேதி இரவு தனது சொந்த ஊரான பெரியகுளம் வந்தார். கைலாசபட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கினார். தொடர்ந்து 2 நாட்களாகத் தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதில் பல மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் இரவு போடி சென்றுவிட்டு மீண்டும் பண்ணை வீட்டுக்கு வந்து தங்கினார். தேனி அருகே நாகலாபுரத்தில் நேற்று காலை கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற நகரும் நியாய விலைக் கடைகள் தொடக்கவிழாவில் பங்கேற்றார்.
வரும் வழியில் நூறடி நீளத்தில் வருங்கால முதல்வரே வருக என்று குறிப்பிட்ட பேனர்களை பெண்கள் பிடித்தபடி வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆகியோர் பங்கேற்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து, நகரும் நியாய விலைக் கடைகளைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 178 பேருக்கு ரூ.3.88 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.
கம்பம் தொகுதி எம்எல்ஏ எஸ்டிகே.ஜக்கையன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ஏகாம்பரம், கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் அ.ஜீவா, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்எஸ்.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடிந்து கொண்ட ஓபிஎஸ்
கடந்த 2 நாட்களாக துணை முதல்வரைப் பேட்டி காண ஏராளமான பத்திரிகையாளர்கள் ஓபிஎஸ் பண்ணை வீட்டின் முன் பல மணி நேரம் காத்திருந்தனர். இந்நிலையில், நேற்றும் ஏராளமான பத்திரிகையாளர்கள் திரண்டிருந்தனர்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி வேண்டாம் என்று சைகை செய்தபடி புறப்பட்டார். இருப்பினும் அவரை சூழ்ந்து நின்று பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். ஆனால், பாதுகாப்பு அதிகாரிகளும், கட்சியினரும் வலுக்கட்டாயமாக விலக்கி விட்டதால் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், ‘மீடியாக்கள்தான் பரபரப்பை ஏற்படுத்துகிறீர்கள்' எனக் கூறியபடியே ஓ. பன்னீர்செல்வம் சென்னைக்குக் காரில் புறப்பட்டுச் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT