Published : 04 Oct 2020 11:51 AM
Last Updated : 04 Oct 2020 11:51 AM
ஒடுக்கத்தூர் அருகே கொடூரமான முறையில் தந்தை-மகளை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய உறவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் அணைக் கட்டு அடுத்த ஜார்தான்கொல்லை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (50). இவரது மனைவி பாஞ்சாலை (42). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு மூன்று மகள்கள். கடந்த 20 ஆண்டுகளாக வேப்பங்குப்பம் அருகேயுள்ள ரங்கன்கொட்டாய் கிராமத்தில் உள்ள அன்சுபாய் என்பவருக்குச் சொந்தமான கொய்யா தோட்டத்தில் உள்ள சிறிய வீட்டில் தங்கி காவல் பணியில் ஈடுபட்டுவந்தார். இரண்டு மகள்களுக்கு திருமணமாகி ஒடுக்கத்தூரில் வசித்து வரும் நிலையில், பொன்னுசாமியுடன் இளைய மகள் தீபா (7) வசித்து வந்தார்.
இந்நிலையில், பொன்னுசாமி யும் அவரது மகளும் வீட்டினுள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடப்பது நேற்று காலை தெரியவந்தது. அருகில், பாஞ்சாலை அதிர்ச்சியில் அமர்ந் திருந்தார். இந்த கொலை தொடர் பாக வேப்பங்குப்பம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வேலூர் சரக டிஐஜி காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் விரைந்து சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளிகள் குறித்து விசாரணையை தொடங்கியதுடன் ஆல்பர்ட் ஜான் மேற்பார்வையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப் பட்டன.
கிணற்றில் கொடுவாள் மீட்பு
இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணையை தனிப்படையினர் தொடங்கினர். காரணம், வீட்டினுள் பொன்னுசாமி, தீபாவை கொலை செய்தவர்கள் பாஞ்சாலையை எதுவும் செய்யவில்லை. மேலும், கொலையை தடுக்க முயன்றபோது தீபா கொலை செய்யப்பட்டிருக்க லாம் என்ற சந்தேகம் இருந்தது. வீட்டில் இருந்த ஒரு கொடுவாள் கத்தி மாயமானதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஒடுகத்தூர் பகுதியில் உள்ள பொன்னுசாமியின் உறவினர்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், பொன்னுசாமியின் சகோதரியின் மகன் அண்ணாதுரை (24) என்ப வரும் ஒருவர். அவர் அணிந்திருந்த லுங்கியில் ரத்தக்கறை இருந்த தால் சந்தேகத்தின்பேரில் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, பொன்னுசாமியையும் தீபாவையும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். கொலைக்கு பயன்படுத்திய கொடுவாள் கத்தியை பொன்னுசாமியின் வீட்டுக்கு எதிரே இருந்த கிணற்றில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர், தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றில் இருந்த கொடுவாள் கத்தியை மீட்டனர்.
தொடர்ந்து அண்ணாதுரையிடம் விசாரணை செய்ததில், அவரது சொந்த ஊர் அல்லேரி மலை கிராமம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரதலம்பட்டு கிராமத்தில் பெற்றோருடன் குடியேறி வசித்து வருகிறார். சேலத்தில் உள்ள பாக்கு தோட்டத்தில் வேலை செய்துவரும் அண்ணாதுரை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார்.
பொன்னுசாமியின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற அண்ணாதுரை இருவரும் மதுபானம் குடிக்க திட்டமிட்டனர். அப்போது, மதுபானம் அருந்தியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அண்ணாதுரையை பொன்னுசாமி எட்டி உதைத்துவிட்டு வீட்டுக்குள் உறங்கச் சென்றுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அண்ணாதுரை கொடுவாள் கத்தியால் உறங்கிக் கொண்டிருந்த பொன்னுசாமியை வெட்டியுள்ளார். இதை தடுக்க முயன்ற தீபாவையும் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினார் என்று விசாரணையில் தெரியவந்தது.
இந்தத் தகவலின் அடிப் படையில் அண்ணாதுரையை காவல் துறையினர் கைது செய்த னர். இரட்டை கொலை தொடர்பான விசாரணை தொடங்கிய 10 மணி நேரத்துக்குள் கொலையாளியை காவல் துறையினர் கைது செய்த துடன் கொலைக்கு பயன்படுத்திய கொடுவாள் கத்தியையும் மீட்டுள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT