Published : 02 Oct 2020 07:46 PM
Last Updated : 02 Oct 2020 07:46 PM

ஓபிஎஸ்- இபிஎஸ் கருத்து வேறுபாட்டால் அரசு அதிகாரிகள் குழப்பம்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கருத்து

வேலூர்

ஓபிஎஸ்- இபிஎஸ் இடையில் கருத்து வேறுபாடு நிலவுவதால் அரசு அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள வண்டறந்தாங்கல் கிராமத்தில் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் இன்று (அக்.2) நடைபெற்றது. இதில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

கூட்டத்தில், மத்திய அரசின் விவசாய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, துரைமுருகன் பேசும்போது, ‘‘வரலாற்றில் முதல் முறையாக காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்தது அதிமுக அரசுதான். கிராம சபைக் கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்று விவசாய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தீர்மானம் படிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னார். அவர் அறிக்கை கொடுத்த உடனே அதிமுக அரசு கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்துள்ளது. நாங்கள் விவசாயச் சட்டத் திருத்த மசோதாவைட் திரும்பப் பெறக்கோருவது அரசியல் காரணங்களுக்காக அல்ல. விவசாயிகள் நலனுக்காகவே எதிர்க்கிறோம்’’ என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் துரைமுருகன் கூறும்போது, ‘‘இது போட்டி கிராம சபைக் கூட்டம் இல்லை. அரசு நடத்த இருந்த கூட்டத்தைத் திடீரென ரத்து செய்துவிட்டார்கள். மக்கள் குறைகளைக் கூற இருந்தார்கள். நாங்களும் தயாராக இருந்ததால் கிராம சபைக் கூட்டத்தை அரசு ரத்து செய்ததும் நாங்கள் அதை நடத்தி வருகிறோம் அவ்வளவுதான்.

காந்தி பிறந்தநாளில் நடைபெறும் கிராம சபையைத் திடீரென இரவு 9 மணிக்கு ரத்து செய்ய வேண்டிய காரணம் என்ன?இந்த கிராம சபைக் கூட்டத்தில் நாங்கள் சில தீர்மானங்களை நிறைவேற்ற இருந்தோம். அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் பிறகு பார்த்துக்கொள்ளலாம். மக்களை பாதிக்கின்ற வகையில் கிராம சபைக் கூட்டத்தை ஏன் ரத்து செய்ய வேண்டும். இந்தக் கூட்டத்தால் பொதுமக்கள் பத்து பேருக்குட் தீர்வு கிடைத்திருக்கும். நேற்று (அக்.1) மாலை வரை கரோனா அச்சம் தெரியாத அரசுக்கு இரவு 9 மணிக்குத்தான் தெரியவந்து கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்தார்களா?

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே மண், ஒரே மொழி, ஒரே அரசாங்கம் என்பதெல்லாம் ஜனநாயகத்தை அடியோடு பெயர்த்தெடுக்கும் காரியமாகத்தான் நான் கருதுகிறேன். எதுவாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும். அது சேராவிடில் ஜனநாயகமாக இருந்தாலும் சரி, சர்வாதிகாரமாக இருந்தாலும் அதற்குப் பயனில்லை.

ஓபிஎஸ்- இபிஎஸ் கருத்து வேறுபாடால் அரசு அதிகாரிகள் குழம்பிப்போய் உள்ளார்கள். ஒரு ஆட்சியில் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் முதல், இரண்டாம் நிலையில் இருப்பவர்களிடையே வெளிப்படையாக மாறுபட்ட கருத்துகள் நிலவினால் அதிகாரிகள் குழப்பம் அடைவார்கள். அனுப்பவேண்டிய கோப்புகள் தாமதமாகும்.

திமுகவினர் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்தாலும் நாங்கள் அதை நீதிமன்றத்தில் சந்திப்போம். இந்த ஆட்சி இன்னும் 4 மாதங்கள்தான். அதன் பிறகு வழக்குகள் தூக்கி ஏறியப்படும். கூட்டணியில் இருப்பவர்கள் சீட்டுப் போதவில்லை என வெளியே செல்வதும், வெளியில் இருந்து கூட்டணிக்குள் சேருவதும் உண்டு. இதெல்லாம் முடிந்தால்தான் யார் யாருடன் கூட்டணியில் இருப்பார்கள் எத்ன தெரியும்’’ என்றார்.

கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x