Published : 30 Sep 2020 09:03 PM
Last Updated : 30 Sep 2020 09:03 PM
வேலூர்/திருப்பத்தூர்/ராணிப்பேட்டை
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று (செப்-29) இரவு கொட்டித் தீர்த்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குடியாத்தம் மோர்தானா அணை முழுக் கொள்ளளவை எட்டி, உபரிநீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த 5 நாட்களுக்கு மேலாக வெயில் அளவு 95 டிகிரிக்கு மேல் கொளுத்தியது. இருப்பினும், மாலை மற்றும் இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வீசியது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது மிதமான மழையும் பெய்து வந்தது.
இந்நிலையில், நேற்றிரவு 8 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கன மழை பெய்தது. வாணியம்பாடி, ஆலங்காயம், ஏலகிரி, திருப்பத்தூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.
இதனால், திருப்பத்தூர் ரயில்வே நிலையம் சாலை, நகரக் காவல் நிலையம் அருகேயுள்ள புளிய மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. பலத்த காற்றுடன் கன மழை கொட்டியதால் பல இடங்களில் மின்வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் அப்பகுதிகளி்ல் மின் விநியோகம் தடைபட்டது. கந்திலி, நாட்றாம்பள்ளி, மண்டலவாடி, நாயனசெருவு, வாணியம்பாடி, உதயேந்திரம், கொடையாஞ்சி, அம்பலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது.
மோர்தானா அணை நிரம்பியது
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கன மழையால் குடியாத்தம் மோர்தானா அணை முழுமையாக நிரம்பி, உபரி நீர் வெளியேறியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அதேபோல, திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து காணப்படுகிறது. ஜவ்வாது மலைகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதாகப் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆம்பூரில் அதிகபட்சமாக 128.6 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. இதனால், ஆம்பூர் பஜார் பகுதி, உமர்சாலை, நேதாஜி சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஒடியது. அதேபோல, ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலைப்பகுதியிலும், காப்புக்காடுகளிலும் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருவதால் ஆனைமடுகு தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கானாற்றில் ஏற்பட்ட வெள்ளம் ஆனைமடுகு தடுப்பணைக்குச் சென்றதால், அதுவும் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.
இதனால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது, நெல், வேர்க்கடலை, சோளம், வாழை உள்ளிட்ட பயிர் வகைகளைச் சாகுபடி செய்திருப்பதால் தற்போது பெய்து வரும் மழையால் அதிக விளைச்சலை எதிர்பார்ப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இன்று (செப்.30) காலை நிலவரப்படி பதிவான மழையளவு விவரம் வருமாறு:
ஆலங்காயம் 42.8 மி.மீ., ஆம்பூர் டவுன் 76.8 மி.மீ., ஆம்பூர் வடபுதுப்பட்டு 128.6 மி.மீ., நாட்றாம்பள்ளி 48 மி.மீ., திருப்பத்தூர் 60 மி.மீ., வாணியம்பாடி 70.0 மி.மீ., குடியாத்தம் 7.0 மி.மீ., மேல் ஆலத்தூர் 11.20 மி.மீ., பொன்னை 16.80 மி.மீ., வேலூர் 3.10 மி.மீ., அரக்கோணம் 7.8 மி.மீ., ஆற்காடு 17.6 மி.மீ., காவேரிப்பாக்கம் 84.0 மி.மீ., சோளிங்கர் 39.0மி.மீ., வாலாஜா 20.4 மி.மீ., அம்மூர் 5.4 மி.மீ., கலவை 22.4மி.மீ., எனப் பதிவாகியிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT