Published : 25 Sep 2020 11:32 AM
Last Updated : 25 Sep 2020 11:32 AM
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சிலர் ஆன்லைனில் நடைபெற்ற தேர்வை சர்வர் பழுது காரணமாக எழுத முடியாமல் போனதாகவும், இப்பிரச்சினைக்கு உயர் கல்வித்துறை தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட சேலம் ராமலிங்கபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வு நேற்று தொடங்கியது.
அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலர் சர்வர் பிரச்சினை காரணமாக தேர்வு எழுத சிரமத்துக்குள்ளாகினர். இதுதொடர்பாக உயர்கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஆத்தூர் உடையார்பாளையத்தைச் சேர்ந்த மாணவி ஆர்.சவுமியா தேவி கூறியதாவது:
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் மல்டி கோர் ஆர்க்கிடெக்சர் கம்ப்யூட்டிங் அன்டு புரோகிராமிங் பாடத்துக்கான ஆன்லைன் தேர்வு நேற்று நடந்து. தேர்வுக்கு காலை 10 மணிக்கு இணையதளத்தில் ‘லாக்-இன்’ செய்ய முடியவில்லை. பல முறை முயற்சித்த பின்னர், 10.45 மணிக்கு மேல், ‘லாக்-இன்’ செய்ய முடிந்தது. தொடர்ந்து தேர்வினை எழுதியநிலையில், அடுத்த அரை மணி நேரத்தில் சர்வர் பழுது ஏற்பட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சக மாணவிகள் சிலருக்கும் இதேபிரச்சினை ஏற்பட்டு அவர்களும் தேர்வை எழுத முடியாமல் போய்விட்டது. மேலும், சிலருக்கு தேர்வு எழுதி முடித்து சமர்ப்பிக்க வேண்டிய நேரத்தில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது என சர்வரில் தகவல் வரவில்லை.
இதுதொடர்பாக ‘டோல் ஃப்ரீ’ எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டும், அதில் இணைப்பு கிடைக்கவில்லை. இறுதியாண்டு தேர்வின் முதல் பாடத்துக்கான தேர்வு இப்படியாக அமைந்துவிட்டதால் எங்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. இன்று (25-ம் தேதி) அடுத்த தேர்வு இருக்கிறது. இத்தேர்வில் ஏற்பட்ட பாதிப்பினால் அடுத்த தேர்வுக்கு தயாராவதில் மனதளவில் குழப்பமும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு உயர்கல்வித் துறை உரிய தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT