Published : 23 Sep 2020 04:49 PM
Last Updated : 23 Sep 2020 04:49 PM
விசைப்படகுகளின் தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி மீன்பிடிப்பைத் தடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் காதில் பூச்சூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் இரட்டைமடி, சுருக்குடி, விசைப்படகுகளின் கரையோர மீன்பிடிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்,
ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் போலி ஆர்.சி.புத்தகங்களை பயன்படுத்தி அதிகரித்து வரும் விசைப்படகுகளால் ஏற்பட உள்ள தொழில் நெருக்கடியை தவிர்த்திட முறையான ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மீ்ன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மீனவர்கள் காதில் பூச்சூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டமைப்பின் தலைவர் இ.ஜஸ்டின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி கூறும்போது, நாட்டுப்படகு மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும், விசைப்படகுகள் கரையோர மீன்பிடிப்பும், அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி மீன்பிடிப்பும் தொடர்கிறது. மீன்வளத்துறை கடும் நடவடிக்கை எடுக்காததால் அதை தெரிவிக்கும் வகையில் காதில் பூச்சூடி போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க ஆண்டிற்கு ரூ. 1 கோடி வரை லஞ்சமாக மீன்வளத்துறையினருக்கு வழங்கப்படுகிறது. இதுகுறித்து முதல்வர், மீன்வளத்துறை அமைச்சர் வரை புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே கடல் வளத்தை அழிக்கும் தடை செய்யப்பட்ட வலை மீன்பிடிப்பை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் மீனவர்கள் ஊர்வலமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்திற்குச் சென்று, அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அதனையடுத்து மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் விசைப்படகுகளை பிடிக்க கடல்வள சட்டத்தை அமல்படுத்தும் போலீஸாருக்கு வழங்ப்பட உள்ளது. அதனால் விரைவில் இது தடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதனையடுத்து மீனவர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை துணை இயக்குநரிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT