Published : 16 Sep 2020 12:12 PM
Last Updated : 16 Sep 2020 12:12 PM
கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் ஆரம்பம் முதலே கரோனா நோய்த் தொற்று அதிக எண்ணிக்கையில் இருந்து வந்தது. கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வந்த நிலையில் கரோனா பரவல் இன்னும் அதிகமானது. அதனால் கடலூர் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளிலும் கரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று மட்டும் 268 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் மொத்தம் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 16,835 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் குணமடைவோர் விகிதமும் அதிகரித்து வருவதால் தொற்றுக்கு ஆளானவர்களில் தற்போது 2,818 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். 523 பேர் நேற்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது கரோனா சிகிச்சைக்காக, சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையமும் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளும் கொண்ட 120 படுக்கைகளுடன் கூடிய இந்த மையம், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான பலனைத் தரும் நிலையில் கடலூரில் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டிருப்பது மாவட்டத்தில் தொற்று உள்ளவர்கள் இன்னும் விரைவாக மீண்டு வர ஏதுவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த மையம் குறித்துப் பேசிய மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், “இங்கு சித்த மருந்துகளுடன், நோயாளிகள் அனைவருக்கும் மூலிகைகளுடன் கூடிய அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. நோயாளிகள் விரைவில் குணமடையச் சிறப்பு மருந்துகள், யோகா, மூச்சுப் பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மூலிகைக் கசாயம், மூலிகைத் தேநீர், மூலிகை பானம் ஆகியவையும் கொடுக்கப்படுகின்றன.
இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் 5 அல்லது 6 நாட்களுக்குள் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்புவார்கள். எனவே, நோய்த் தொற்றாளர்கள் நம்பிக்கையுடன் இங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு நலம் பெறலாம்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT