Published : 14 Sep 2020 07:47 AM
Last Updated : 14 Sep 2020 07:47 AM

செங்கல்பட்டு நகரில் உள்ள கால்வாய்களை மழைக்கு முன்பு தூர்வார வேண்டும்: பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

செங்கல்பட்டு நகரில் உள்ள கால்வாயில் புதர் மண்டியுள்ளது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் பெரும்பாலான மழைநீர் வடிகால் மற்றும்கழிவுநீர் கால்வாய்கள் சிதிலமடைந்துள்ளன.

ஜேசிகே நகர், கரிமேடு, பாரதி நகர், புதுஏரி, கோகுலபுரம், அனுமந்த புத்தேரி, காண்டீபன் தெரு, திம்மராஜகுளம், பச்சையம்மன் கோயில், அண்ணா நகர்பகுதிகளில் உள்ள அனைத்து கால்வாய்களிலும் முட்புதர்கள் மண்டியுள்ளன. இதனால் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல இடங்களில் தேங்கியுள்ளது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தியும் பெருகி வருகிறது. பருவ மழை தொடங்குவதற்கு முன்பு கழிவுநீர் கால்வாயில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், முட்புதர்களை அகற்றி அனைத்து கால்வாய்களையும் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை செங்கல்பட்டு மக்களிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து செங்கல்பட்டு குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

மழைக் காலங்களில் எளிதாக வெள்ள நீர் வெளியேறும் வகையில் இருந்த கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் குறுகியும், கழிவுநீர் கால்வாயாகவும் குப்பை கொட்டும் மையமாகவும் மாறியுள்ளன. இதனால் நீர் வழித்தடங்கள் முழுவதும் மண் மூடியும், புதர் மண்டியும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியும் காணப்படுகின்றன.

மழைக் காலங்களில் மழைநீர் வடிய வழியில்லாமலும், மழை நீர் கழிவுநீருடன் சேர்ந்து குடியிருப்புகளுக்கு உள்ளே புகும் அபாயமும் உள்ளது. பருவமழைக்குள் அனைத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம் இதுவரை தூர்வாரும் பணியை மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் பலனில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x