Published : 13 Sep 2020 11:53 AM
Last Updated : 13 Sep 2020 11:53 AM
அரியலூர் அருகே ஊராட்சி சார்பில் ரூ.2-க்கு 10 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அரியலூரை அடுத்துள்ள வெங்கடகிருஷ்ணபுரம் கிராமத்தில் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள். இப்பகுதி முழுவதும் சுண்ணாம்புக்கல் அதிகளவு கிடைப்பதால், ஆரம்ப காலத்திலிருந்தே சுண்ணாம்பு கலந்த தண்ணீரையே இக்கிராம மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், தற்போது ஊராட்சித் தலைவியாக உள்ள வள்ளியம்மை(45), அரசிடமிருந்து ரூ.8 லட்சம் பெற்று கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் அமைப்பை ஏற்படுத்தி உள்ளார். இதில், ஏடிஎம் முறையில் ரூ.2 நாணயத்தை இயந்திரத்தில் போடும்பட்சத்தில், 10 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வருகிறது. இதனால், அக்கிராம மக்கள் தற்போது தூய்மையான தண்ணீரைக் குடித்து வருகின்றனர்.
இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த வைஜெயந்தி கூறியபோது, “கேன்களில் விற்கப்படும் தண்ணீரை ரூ.30, 35 கொடுத்து, விவசாயக் கூலி வேலை செய்யும் எங்களால் வாங்கிக் குடிக்க முடியாத சூழலில், ரூ.2-க்கு 10 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பது எங்கள் கிராம மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இந்த தண்ணீரை 24 மணி நேரமும் பிடித்துக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதனால், வயல்வேலைக்கு செல்லும் முன்பாகவோ, வயலுக்குச் சென்று வந்த பின்னரோ எப்போது வேண்டுமானாலும் நாங்கள் சென்று தண்ணீரை பிடித்துக்கொள் வோம். அதேபோல, எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, இந்த வழியே செல்லும் லாரி உள்ளிட்ட வாகன ஓட்டிகளும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பிடித்துச் செல்கின்றனர் என்றார்.
இதுகுறித்து ஊராட்சி தலைவி வள்ளியம்மை, 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியபோது, “கிராம மக்களின் அடிப்படை தேவைகளில் முக்கியமானதான குடிநீரை தரமாக வழங்க வேண்டும் என்பதால், அரசின் உதவியுடன் கடந்த ஜூலை 18-ம் தேதி முதல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கி வருகிறேன். எங்கள் கிராம மக்கள் நல்ல குடிநீரை அருந்துவது மன நிறைவை தருகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT