Published : 13 Sep 2020 11:40 AM
Last Updated : 13 Sep 2020 11:40 AM
கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் பறவைகளை வேட்டையாடு பவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித் துள்ளனர்.
கிருஷ்ணகிரி வனச்சரகம் 28 ஆயிரத்து 528 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இதில் 39 காப்புக் காடுகளும், சமூக காடுகளும் உள்ளன. இந்த காடுகளில் அதிகளவில் மலைப்பாம்புகள் உள்ளன. மேலும், மான், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இங்கு உள்ளன. இக்காடுகளில் பரவலாக மயில், நாரை, புறா, கழுகு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பறவை வகைகள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், காப்புக் காடுகளில் உள்ள பறவைகளை, மர்ம நபர்கள் சிலர் அடிக்கடி வேட்டையாடி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் பறவை ஆர்வலர்கள். இதுதொடர்பாக நாகரசம்பட்டி அடுத்த என்.தட்டக்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிவகுரு, பிரபு ஆகியோர் கூறும்போது, ‘‘எங்கள் கிராமத்தின் அருகே காப்புக்காட்டில் பெரிய பாறை பகுதி உள்ளது. இந்த பகுதியில் மர்ம நபர்கள் பறவைகளை இறைச்சிக்காக வேட்டையாடுகின்றனர்.
பின்னர், பறவையின் எச்சங்களை வீசி விட்டுச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கடந்த சிலதினங்களுக்கு முன்பு, 5 பறவைகளைக் வேட்டையாடி, இறைச்சிக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளோம். பறவைகளை காக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
இதுதொடர்பாக வனச்சரகர் சக்திவேல் கூறும்போது, ‘‘பெரிய பாறை பகுதியில் இறந்துகிடந்த பறவையின் எச்சங்கள், தலைகள், கால்கள், நகங்கள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளது. இறந்து கிடந்தது என்ன வகை பறவை என்பது கால்நடை பராமரிப்புத்துறை ஆய்வு அறிக்கையில் தெரியவரும்.
எந்த பறவையாக இருந்தாலும் சரி, தொடர்புடைய மர்மநபர்கள் யார் எனக் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வனத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து விலங்குகளை வேட்டையாடுதல், துன்புறுத்துதல் சட்டப்படி குற்றம். மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வனப்பகுதியில் இரவு ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும்,’’ என்றார். எஸ்.கே.ரமேஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT