Published : 11 Sep 2020 08:08 AM
Last Updated : 11 Sep 2020 08:08 AM
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 376 பேர் பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடாக பயனடைந்து வந்தது தெரியவந்துள்ளது.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டத்தில் போலி பயனாளிகள் இணைந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ரூ.110 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக வேளாண் துறை செயலர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். குறிப்பாக கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இத்திட்டத்தில் போலி பயனாளிகள் பலர் சேர்ந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2,383 தகுதியற்ற நபர்கள் பிரதமரின் கிசான் திட்டத்தில் பயனடைந்து வந்தது கண்டறியப்பட்டதை அடுத்து, அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுஉள்ளன.
இந்நிலையில், இத் திட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 376 பேர் முறைகேடாக பயனடைந்து வந்தது அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அவர்களிடமிருந்து பணத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனிநபர் ஒருவர் தகுதியற்ற நபர்களிடம் தலா ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு, கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவின்பேரில், வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தீவிர விசாரணையால், மாவட்டத்தில் இதுவரை ரூ.17.40 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் மோசடி
விழுப்புரம் மாவட்டத்தில், நடந்த விசாரணையில் விவசாயிகள் அல்லாத போலி பயனாளிகள் 90 ஆயிரம் பேர் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் தங்களது வங்கிக் கணக்கின் மூலம் பெற்ற ரூ.6.50 கோடி தொகையை திரும்ப பெறும் நடவடிக்கையில் மாவட்ட வருவாய் துறையினர் இறங்கிஉள்ளனர்.
போலி பயனாளிகள் இந்தப் பணத்தை உடனே அரசு வசம் திரும்ப தர வேண்டும், இல்லாத பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வேளாண் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT