Published : 10 Sep 2020 04:55 PM
Last Updated : 10 Sep 2020 04:55 PM

வேலூர் மாவட்டத்தில் கிசான் சம்மன் திட்டத்தில் முறைகேடாக உதவித்தொகை பெற்றவர்களிடம் பணத்தை வசூலிக்க 7 சிறப்புக் குழுக்கள்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தில் முறைகேடாக உதவித்தொகை பெற்றவர்களிடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெறுவற்காக 7 துணை ஆட்சியர்கள் தலைமையில் சிறப்புக் குழுக்களை அமைத்து ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிசான் சம்மன் திட்டத்தில் முறைகேடாகப் பணம் பெற்றவர்களிடம் இருந்து பணம் வசூலிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்.10) நடைபெற்றது. ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநர் மகேந்திர பிரதாப் தீட்ஷித், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருகுண ஐயப்பதுரை மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம் தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, "வேலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் சுமார் 3,000 பேரும் வட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 600 பேர் போலி ஆவணங்கள் மூலம் பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 13 ஆயிரம் பேர் வேலூர் மாவட்டத்தில் உதவித்தொகை பெறுவது தெரியவந்துள்ளது. அவர்களின் விவரங்களை அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி உள்ளோம்.

ஏறக்குறைய ரூ.1.50 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாகப் பணம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் பணியைத் தொடங்கி உள்ளோம். இதுவரை சுமார் ரூ.47 லட்சம் அளவுக்குப் பணத்தை வசூல் செய்துள்ளோம். வங்கிக் கணக்குகளை முடக்கியதுடன் பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 வட்டாரங்களில் 7 துணை ஆட்சியர்கள் தலைமையில் வருவாய்த்துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வங்கிக் கணக்கு விவரங்களின் அடிப்படையில் நேரடியாகச் சென்று விசாரித்து பணத்தை வங்கிகள் மூலமாகவே திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தமிழக முதல்வர் கூறியதுபோல், விவசாயிகள் நேரடியாகப் பதிவு செய்துகொள்ளலாம் என்று கூறியதால்தான் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது. மத்திய அரசு தளர்த்திய விதிகளைப் பயன்படுத்தி ஒரு கும்பல் திட்டமிட்டு பொதுமக்களைச் சந்தித்து கரோனா நிதி வழங்குகிறது என்று கூறி ஆதார் எண், வங்கிக் கணக்குகளை மட்டும் பெற்று மோசடி செய்துள்ளனர். இதற்காக ரூ.500 தொகை வசூலித்துள்ளனர். முறைகேடுகளுக்கு சில விவசாய சங்கப் பிரதிநிதிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்களின் விவரங்களையும் திரட்டியுள்ளோம்.

முறைகேடாக உதவித்தொகை பெற்றவர்கள் அந்தப் பணத்தைத் திரும்பச் செலுத்த ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். அதற்குள் அவர்கள் பணத்தை வங்கிகளில் திரும்பச் செலுத்தாவிட்டால் அவர்கள் மீது சிபிசிஐடியில் புகாராக அளிக்கப்படும்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x