Published : 10 Sep 2020 04:14 PM
Last Updated : 10 Sep 2020 04:14 PM
ஊரடங்கு காலத்தில் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களிடம் அத்துமீறி செயல்படும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களைக் கண்டித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் சிஐடியு சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு, மாதர் சங்க நிர்வாகி கற்பகம், சிஐடியு நிர்வாகி வேல்முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாதர் சங்க நிர்வகிகள் தங்கம், சங்கரி, மேனகா, மல்லிகா, சிஐடியு நிர்வாகிகள் ஆரியமுல்லை, பொட்டுசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊரடங்கு காலத்தில் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களிடம் அத்துமீறி செயல்படும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களைக் கண்டித்தும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோஷமிட்டனர். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘தென்காசி மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் தமிழக அரசின் உத்தரவை மீறி கரோனா காலத்தில் பெண்களிடம் ஆபாசமாக பேசி, தற்கொலைக்குத் தூண்டும் வகையில் அடாவடி வசூல் செய்கின்றன. கட்டாய அபராத வட்டி வசூல் செய்தும் துன்பப்படுத்துகின்றனர்.
ஊரடங்கு காலம் முடியும் வரை மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களிடம் அடாவடி வசூல், கட்டாய வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். பெண்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, தற்கொலைக்குத் தூண்டும் வகையில் செயல்படும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களின் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை வாங்கி வைத்துக்கொண்டு மிரட்டுகின்றனர். அந்த ஆவணங்களை சுய உதவிக்குழு பெண்களிடம் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் உள்ள வட்டி, அபராத வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கணபதி, வேல்மயில், லெனின்குமார், கிருஷ்ணன், பால்ராஜ், மகாவிஷ்ணு, குருசாமி, கருப்பையா மற்றும் சுயஉதவிக் குழு பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT