Published : 09 Sep 2020 09:56 AM
Last Updated : 09 Sep 2020 09:56 AM
பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 70,799 போலி பயனாளிகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர்.
எளிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டது ‘பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டம்’. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் வங்கிக் கணக்கில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக வரவு வைக்கப்படும். இடையில், அதிக, கூடுதல் பயனாளிகள் சேருவதற்காக ஆன்லைன் மூலம் இத்திட்டத்தில் சேர தளர்வு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் அல்லாத பலர், போலி பயனாளிகளாக சேர்ந்து பயன்பெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இந்த மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் முறையே ரூ.4.8 கோடி அளவில் போலி பயனாளிகளிடம் இருந்து பணம் கையகப்படுத்தப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
கடலூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் பயன்பெறுவதற்காக 80,737 மனுக்கள் வரப்பெற்றன. இதில் வெளி மாநில, மாவட்டத்தைச் சேர்ந்த மனுக்கள் 35,231 ஆகும். இம்மனுக்களை அந்தந்த மாநில, மாவட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். கடலூர் மாவட்டத்தில் தகுதியான விண்ணப்பங்கள் 3,483 ஆகும். தகுதியற்ற விண்ணப்பங்கள் 43,075 ஆகும். வெளி மாவட்டங்களிலிருந்து வரப்பெற்ற விண்ணப்பங்கள் 27,634 ஆகும்.
இதுதவிர, கடலூர் மாவட்டத்தில்மொத்தம் 70,709 போலி பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
ரூ.5 கோடி மீட்பு
அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.14.26 கோடி வசூல் செய்ய வேண்டியுள்ளது. முதல் கட்டமாக 226 வங்கிக் கிளைகளில் 162 வேளாண் களப்பணியாளர்கள் மூலமாக ரூ.5 கோடி பிரதமரின் கிசான் மாவட்ட ஆட்சியரின் வங்கி கணக்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள ரூ.9.26 கோடியை வருவாய்த்துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் காவல்துறை சேர்ந்த களப்பணியாளர்களை கொண்டு வசூல் செய்ய நடடிவக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 720 வருவாய் கிராமங்களுக்கும், 170 குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் கிராம அளவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் 3 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த முறைகேடுகள் குறித்து தீவிர விசாரனை நடத்த காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளில் தொடர்புடைய நபர்கள் மீத துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இத்திட்டத்தில் தகுதியான பயனாளிகள் விடுபட்டிருப்பின் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளித்து இந்த திட்டத்தில் பயனடையலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில்
பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 1,600 பேர் பயன்பெற்று வருவது தெரியவந்ததை அடுத்து அவர்களது வங்கிக் கணக்குகள் ஏற்கெனவே முடக்கப்பட்டன.
783 போலி பயனாளிகள்
இந்நிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வில், தகுதியற்ற மேலும் 783 பேர் கிசான் திட்ட பயனாளிகளாக சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்துஉள்ளது. இதையடுத்து, அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை விவசாயிகள் அல்லாதவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.50 லட்சத்துக்கும் மேல் பணம் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ரூ.13 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT