Published : 07 Sep 2020 08:02 AM
Last Updated : 07 Sep 2020 08:02 AM
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸில் இருந்த சிலிண்டர் வெடித்ததில், வாகனம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருவதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸின் தரத்தை ஆய்வு செய்ய சுகாதாரத் துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கரோனா சிகிச்சையில் இருந்தமூதாட்டி ஒருவரை பரிசோதனைக்காக நேற்று காலை 108 ஆம்புலன்ஸில் அழைத்து வரும்போது, எதிர்பாராதவிதமாக ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ பிடித்தது. சிறிது நேரத்தில் மளமளவென ஆம்புலன்ஸ் முழுவதும் தீ பற்றியதால் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. ஆம்புலன்ஸில் இருந்த மூதாட்டி, ஓட்டுநர் செல்வகுமார், உதவியாளர் அம்பிகா ஆகியோர் உயிர் தப்பினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தீயணைப்புத் துறையினர் பற்றியெரிந்த ஆம்புலன்ஸ் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து காரணமாக மற்ற ஆம்புலன்ஸ்களில் உள்ள சிலிண்டர்களின் தன்மை குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீஸார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்புலன்ஸ் பற்றி எரிந்தபோது, தீ விபத்து எற்பட்ட இடத்தில் தீயை அணைக்க தண்ணீர் குழாய் இருந்ததாகவும், அதை அவசரத் தேவைக்காக பயன்படுத்த முயன்றபோது அந்தக் குழாய் பயனற்று இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் அவசரகால தீ தடுப்பு சாதனங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே மருத்துவமனையில் பாதுகாப்பு வசதிகள் போதிய அளவில் உள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
108 ஆம்புலன்ஸின் தரத்தை ஆய்வு செய்ய சுகாதாரத் துறைச் செயலர் உத்தரவு
தமிழக அரசு ஜிவிகே - இஎம்ஆர்ஐ நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்துகிறது. தமிழகத்தில் 1,100 வாகனங்கள் சேவையில் உள்ளன. முறையாக பராமரிக்கப்படாததால் வாகனங்களை இயக்குவதில் அடிக்கடி சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நின்றிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. நேற்று காலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் தீப்பிடித்து எரிந்த இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “தமிழகத்தில் உள்ள அனைத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் நன்றாக உள்ளன. எதிர்பாராதவிதமாக ஒருசில சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே, வாகனங்களில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவைகளின் தரம், பழுது போன்றவற்றை கண்டறிந்து சரி செய்யவும், அனைத்து வாகனங்களிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT