Published : 05 Sep 2020 04:29 PM
Last Updated : 05 Sep 2020 04:29 PM
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஐந்து சித்த மருந்துகளை ஆய்வு செய்ய மத்திய மருந்து ஆராய்ச்சி மையம் அனுமதி அளித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் கரோனா பராமரிப்பு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சித்த மருத்துவ முறையில் கரோனா பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கரோனா தொற்று நோயாளிகளுக்கு சித்த மருந்துகளான தாளிசாதி வடகம், பிரமானந்த பைரவம், அமுக்குரா மாத்திரை, ஆடாதொடை மணப்பாகு, கபசுரக் குடிநீர் போன்ற மருந்துகள் நோய் அறிகுறிகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது.நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சித்த மருந்துகள் மூலம் பலன் கிடைப்பதும் தெரியவந்துள்ளது.
ஆவி பிடித்தல்
இந்த மையத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தினமும் நொச்சி, கற்பூரவள்ளி, துளசி, மஞ்சள் கலந்து ஆவி பிடித்தல், உப்பு, மஞ்சள், வெந்நீர் கொண்டு வாய் கொப்பளித்தல், மூலிகைத் தேநீர் முதலியன வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், நோயாளிகளுக்கு சித்தர் யோகம், திருமூலர் மூச்சுப் பயிற்சி, அகத்தியர் ஆசனப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் சுசி கண்ணம்மா தெரிவித்தார்.
மத்திய அரசு அனுமதி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஐந்து சித்த மருந்துகளின் பயன்பாடு மற்றும் தாக்கம் குறித்த ஆய்வுக்கு மத்திய மருந்து ஆராய்ச்சி மையம் அனுமதி அளித்துள்ளது. மேலும், நோயாளிகளின் விவரம், அவர்களுக்கு அளிக்கப்படும் மருந்துகள் குறித்த விவரங்களைப் பதிவு செய்யும்படியும் அனுமதி அளித்துள்ளனர் என்று சித்த மருத்துவ சிகிச்சை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சுகன்யா தெரிவித்தார்.
300 படுக்கை வசதிகள்
இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி கூறும்போது, "ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஜூலை 21-ம் தேதி 70 படுக்கை வசதிகளுடன் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இங்கு அளிக்கப்படும் சித்த மருந்துகளால் நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, படுக்கைகளின் எண்ணிக்கை 300 ஆக அதிகரிக்கப்பட்டது. இதுவரை இங்கு சிகிச்சை பெற்று 392 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சித்த மருத்துவ சிகிச்சை ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் அதற்கான விவரங்கள் பதிவு செய்யும் பணியும் தொடங்கியுள்ளது" என்று தெரிவித்தார்.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு ஏற்கெனவே அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்திலும் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு அனுமதி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT