Published : 03 Sep 2020 08:37 AM
Last Updated : 03 Sep 2020 08:37 AM
‘மாணவர்களின் பாகுபலியே’, ‘அரியரை வென்ற அரசனே’ என தமிழக முதல்வரை பாராட்டி கல்லூரி தேர்வில் அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்கள் சிலர் திண்டுக்கல் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகளை திறக்கமுடியாத சூழ்நிலையில், தேர்வுகளையும் நடத்த இயலவில்லை. பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.
அதைத்தொடர்ந்து, கல்லூரி இறுதி ஆண்டு தேர்வைத் தவிர,அரியர்ஸ் தேர்வு உள்ளிட்ட அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியானது.
இதனால், அரியர்ஸ் தேர்வில்பங்கேற்க கட்டணம் செலுத்தியிருந்த மாணவர்கள் அனைவரும் அந்தப் பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். பலமுறை தேர்வு எழுதியும் தேர்ச்சி அடைய முடியாமல் தவித்து வந்த மாணவர்கள் அனைவரும் அரசின் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்தனர்.
23 அரியர்ஸ் வைத்திருந்த திருச்சியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் சமூக வலைதளத்தில் முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இது வைரலானது.
இந்நிலையில் நேற்று திண்டுக்கல் நகர் முழுவதும் மாணவர்கள் சிலரின் புகைப்படங்களுடன் தமிழக முதல்வரை பாராட்டி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. போஸ்டரில், ‘‘மாணவர்களின் பாகுபலியே’, ‘அரியரை வென்ற அரசனே’ என்ற வாசகங்களுடன் முதல்வரின் படம் அச்சிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT