Published : 01 Sep 2020 04:49 PM
Last Updated : 01 Sep 2020 04:49 PM

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை இல்லாததால் ஜேஇஇ நுழைவுத் தேர்வு மையத்துக்கு தாமதமாக வந்த மாணவர் ஏமாற்றம்

மாணவர் ரக்‌ஷன் சிங்.

வேலூர்

மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படாததால் வேலூரில் நடைபெற்ற ஜேஇஇ நுழைவுத் தேர்வு மையத்துக்குத் தாமதமாக வந்த மாணவர் அனுமதிக்கப்படவில்லை என்பதால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார்.

நாடு முழுவதும் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பி.ஆர்க், பி.டெக் உள்ளிட்ட படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு இன்று (செப். 1) தொடங்கி வரும் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 34 தேர்வு மையங்களில் தேர்வு தொடங்கிய நிலையில், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் வளாகத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேளை சுழற்சி நேர அடிப்படையில் மாணவர்கள் தேர்வில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலூரில் இன்று காலை நடைபெற்ற தேர்வில் 168 பேர் பங்கேற்க வேண்டும் என்ற நிலையில் 77 பேர் கலந்துகொண்டனர். பிற்பகல் நடைபெற்ற தேர்வில் 234 பேரில் 115 பேர் மட்டும் கலந்துகொண்டனர். இன்று மட்டும் 210 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வில் பங்கேற்ற அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி பயன்படுத்திய பிறகே உள்ளே சென்றனர். மாணவர்கள் பயன்படுத்திய முகக்கவசத்துக்குப் பதிலாக தேசிய தேர்வு முகமை சார்பில் வழங்கப்பட்ட முகக்கவசத்தை மாணவர்கள் அணிந்து சென்றனர். தேர்வு அறையில் 2 மீட்டர் இடைவெளியில் மாணவர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பேருந்து இல்லாததால் ஏமாற்றம்

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மாவட்டங்களுக்குள் பேருந்து சேவை இன்று தொடங்கியது. மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர் ரக்‌ஷன் சிங் ஜேஇஇ தேர்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து தேர்வு மையம் வருவதற்கு முறையான பேருந்து வசதி இல்லாததால் தாமதமாக வந்த மாணவர் ரக்‌ஷன் சிங் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இது தொடர்பாக ரக்‌ஷன் சிங் கூறும்போது, "தேர்வுக்காக ஆம்பூரில் இருந்து இன்று காலை 7 மணிக்கு பேருந்தில் ஏறினேன். ஆனால், அந்தப் பேருந்து 7.45 மணிக்குத்தான் புறப்பட்டது. ஆம்பூரில் இருந்து மாதனூர் வரை மட்டும் பேருந்தில் பயணிக்க முடிந்தது. அங்கிருந்து ஆட்டோ மூலம் பள்ளிகொண்டா வந்தடைந்தேன். அதன்பிறகு வேலூருக்குப் பேருந்து இல்லாததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் 'லிப்ட்' கேட்டு தேர்வு மையத்துக்கு வருவதற்கு காலை 9.30 மணியாகிவிட்டது.

பேருந்து சேவையில் கட்டுப்பாடு இல்லாமல் இருந்திருந்தால் ஒரே தேசிய நெடுஞ்சாலைதான். ஒரு மணி நேரத்தில் என்னால் குறித்த நேரத்துக்குத் தேர்வு மையத்துக்கு வந்திருக்க முடியும். அதுவும் வேலூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே அந்தத் தேர்வு மையம் அமைந்துள்ளது.

கஷ்டப்பட்டு வந்தும் தேர்வு எழுத முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. நாளை (செப். 2) பிற்பகல் பி.டெக் பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ தேர்வை அதே மையத்தில் எழுத உள்ளேன். தேர்வுக்காக மட்டும் சிறப்புப் பேருந்து வசதி செய்திருக்கலாம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x