Published : 31 Aug 2020 05:48 PM
Last Updated : 31 Aug 2020 05:48 PM
கீழணை, வீராணம் எரியில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கீழணையில் இன்று (ஆக.31) பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொழில்துறை அமைச்சர் சம்பத் தலைமை தாங்கி பாசன வாய்க்கால்களில் மதகுகளைத் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர்கள் கடலூர் சந்திரசேகர் சாகமூரி, அரியலூர் ரத்னா, அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் வடக்குராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 400 கன அடி தண்ணீரும், தெற்கு ராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 400 கன அடி தண்ணீரும், வடவாற்றில் விநாடிக்கு 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வீராணம் ஏரியில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொழில்துறை அமைச்சர் சம்பத் தலைமை தாங்கி பாசன வாய்க்காலின் மதகுகளைத் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, சிதம்பரம் பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், கீழணை உதவி செயற்பொறியாளர் அருணகிரி மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் ரவிந்திரன், பாலு, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் ராதா வாய்க்காலில் விநாடிக்கு 10 கன அடி தண்ணீரும், வீரணம் புதிய மதகில் (விஎன்எஸ்எஸ்) விநாடிக்கு 74 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. இதனைத் தொடந்து வீராணம் ஏரியில் உள்ள 34 பாசன மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டு மொத்தமாக விநாடிக்கு 405 அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கீழணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் செல்லும் வடவார், காஞ்சன்கொல்லை வாய்க்கால், வடக்குராஜன் வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், விநாயகன் தெரு வாய்க்கால், தெற்கு ராஜன்வாய்க்கால், கும்கிமண்ணியாறு, கீழராமன் மற்றும் மேல ராமன் வாய்க்கால் மற்றும் வீராணம் ஏரி ஆகியவற்றின் மூலம் கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பால் கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT