Published : 31 Aug 2020 12:00 PM
Last Updated : 31 Aug 2020 12:00 PM
கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அஞ்சலக ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவையானது பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மீண்டும் நாளை முதல் (செப்டம்பர் 1) தொடங்கப்பட உள்ளது.
நமது அனைத்துத் தேவைகளுக்கும் இப்போது ஆதார் அட்டை கட்டாயம் என்னும் சூழல் உள்ளது. கரோனா காலத்தில் சலூன் கடைகளில் முடிவெட்டுவதற்குக்கூட ஆதார் கார்டு அவசியமாக இருந்தது. ஆதார் தொடர்பான சேவைப் பணிகளை அஞ்சலகங்களும் மேற்கொண்டு வந்தன. எனினும் தொற்றுப் பரவலின் காரணமாக அஞ்சலகங்கள் இந்தச் சேவையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தன. இந்நிலையில், இந்தச் சேவையை மீண்டும் தொடங்குகிறது அஞ்சல்துறை.
இதுகுறித்துக் கன்னியாகுமரி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணேஷ் குமார் 'இந்து தமிழ்' இணையத்திடம் கூறுகையில், ''கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் தலைமை அஞ்சலகம், தக்கலை தலைமை அஞ்சலகம் மற்றும் குழித்துறை, மார்த்தாண்டம் , நெய்யூர், கோட்டார், கருங்கல், சுசீந்திரம், கன்னியாகுமரி, திருவட்டார், களியக்காவிளை, குலசேகரம், உள்ளிட்ட 40 அஞ்சலகங்களில் பொதுமக்கள் ஆதார் தொடர்பான சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
அஞ்சலக ஆதார் சேவை மையங்களில் புதிதாக ஆதார் பதிவு செய்யும் சேவைக்கு கட்டணங்கள் எதுவும் இல்லை. பெயர், வீட்டு முகவரி, வயது, பிறந்த தேதி, மின்னஞ்சல், தொலைபேசி எண் போன்ற திருத்தங்களுக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். கைரேகை, கண் கருவிழி உள்ளிட்ட விவரங்களைத் திருத்தம் செய்யக் கட்டணம் 100 ரூபாய் செலுத்தவேண்டும்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், அஞ்சலகங்களில் டோக்கன் முறையில் ஆதார் சேவை வழங்கப்படும். பதிவு மற்றும் திருத்தம் செய்ய விரும்புவோர், காலை 9 மணிக்கு அஞ்சலகங்களில் டோக்கன் பெற்று, அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் தகுந்த சான்றுகளுடன் அஞ்சலகம் சென்று தங்களுக்கான சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு பதிவு மற்றும் திருத்தம் முடிந்த பின்னரும் பயோமெட்ரிக் கருவியானது அஞ்சல் ஊழியர்களால் சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்தப்படும். ஊழியர்கள் அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்தவும் கண், மூக்கு, வாய் உள்ளிட்ட உறுப்புகளைத் தொடுவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் கைகளைக் கழுவி, சானிடைசர் கொண்டு சுத்தம் செய்த பின்னர்தான் உள்ளே அனுமதிக்கப்படுவர். புகைப்படம் எடுக்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். ஒரு நபர் உபயோகித்த மேஜை மற்றும் நாற்காலி சுத்தம் செய்யப்பட்ட பின்னரே அடுத்த நபர் அனுமதிக்கப்படுவார். வாடிக்கையாளரின் இருமல், சளி போன்ற விவரங்களும், அவர் நோய்த்தொற்று உள்ள பகுதிகளில் இருந்து வருகிறாரா என்பதும் அஞ்சலக அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படும்.
ஒரு மீட்டர் தனிமனித இடைவெளி மற்றும் ஊழியர்களுக்கும் மக்களுக்கும் இடையே தனிமனித இடைவெளி போன்றவை கட்டாயம் கடைப்பிடிக்கப்பட்டு அஞ்சலக ஆதார் சேவை மையங்கள் செயல்படும். எனவே, பொதுமக்களும் தகுந்த சுய கட்டுப்பாட்டுடன் அஞ்சலக ஆதார் சேவைகளைப் பெற்றுப் பயனடைய வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT