Published : 28 Aug 2020 05:22 PM
Last Updated : 28 Aug 2020 05:22 PM

திண்டுக்கல்லில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.9.54 லட்சம் அபராதம் வசூல் 

திண்டுக்கல்  

திண்டுக்கல் நகரில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இதுவரை 9.54 லட்சம் ரூபாயை மாநகராட்சி நிர்வாகம் அபராதமாக வசூலித்துள்ளது.

இருந்தும் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என மாநகராட்சி அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் கரோனா தடுப்பு நடவடிக்கையை தூய்மை பணி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டுவருகிறது.

இதன் ஒரு கட்டமாக முகக்கவசம் அணியாமல் செல்பவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்படுகிறது.

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதார பிரிவு அலுவலர்கள் மட்டுமின்றி, நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் என மாநகராட்சியின் பல்வேறு பிரிவு அலுவலர்களையும் கரோனா தடுப்பு விழிப்புணர்வு பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபடுத்திவருகிறது.

இதையடுத்து முகக்கவசம் அணியாமல் செல்பவர்களை கண்காணிக்க 20 க்கும் மேற்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் திண்டுக்கல் நகரில் வலம்வந்த நபர்களுக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதித்தனர்.

இவ்வாறு கடந்த மூன்று மாதங்களில் மட்டும் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடமிருந்து 9 லட்சத்து 54 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநகரட்சி அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு முகக்கவசம் அணியாமல் செல்பவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,

கரோனா தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாகவே உள்ளது. முகக்கவசம் அணியாமல் பலர் வெளியில் வருகின்றனர். குறிப்பாக டீக்கடைகளில் அதிக கூட்டம் காணப்படுகிறது. பலர் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளி இல்லாமலும் நிற்கின்றனர். பலமுறை எச்சரித்தும், அபராதம் விதித்தும் கட்டுப்படுவதாக இல்லை.

கரோனா தடுப்பு நடவடிக்கையில் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் என்னதான் முயற்சி மேற்கொண்டாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லாததால் கரோனா தடுப்பு நடவடிக்கையை முழுமையாக செயல்படுத்த முடியாதநிலை தான் உள்ளது, என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x