Published : 28 Aug 2020 02:09 PM
Last Updated : 28 Aug 2020 02:09 PM
கரோனா காலத்திலும், தமிழகத்தில் மட்டும் சுமார் ரூபாய் 31,000 கோடி தொழில் முதலீட்டை இந்த 5 மாதங்களில் நாம் ஈர்த்திருக்கின்றோம். இந்தியாவிலேயே, கரோனா காலத்தில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடுதான் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று (28.8.2020) தமிழக முதல்வர் எடப்பாட பழனிசாமி தலைமையில், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது.
அதில் முதல்வர் பழனிசாமி ஆற்றிய உரை:
“கரோனா வைரஸ் நோய்த்தொற்று எளிதாக பரவக்கூடியதாக உள்ளதால் இதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்று அனைத்து ஆய்வுக் கூட்டங்களிலும் செய்தியாளர்களைச் சந்திக்கின்றபோதும் நான் அடிக்கடி தெரிவித்து வருகிறேன்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று உலக அளவில் பரவி, தமிழகத்திலும் பரவியுள்ளது. இதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முனைப்போடு எடுத்து வருகிறது. இந்த நோய்த் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தாலும், மருத்துவ நிபுணர்கள் உதவியுடன் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நேரத்தில் தன்னலம் பாராமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை அரசின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, கூட்டுறவுத் துறை, உணவுத் துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த அலுவலர்களும் அவர்களுக்குத் துணையாக நின்று இந்த நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க உதவி வருகிறார்கள்.
இந்தப் பணிகளில் ஈடுபட்ட பல அரசு அலுவலர்கள் தன்னலம் பாராமல், அர்ப்பணிப்பு உணர்வோடு, சேவை மனப்பான்மையோடு, உயர்ந்த எண்ணத்தோடு தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட காரணத்தினால் எதிர்பாரதவிதமாக தொற்று ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சோதனையான காலத்திலும் அரசு அறிவித்த அறிவிப்புகளுக்கிணங்க அரசு அலுவலர்கள் துரிதமாகச் செயல்பட்டு மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் உரிய நேரத்தில் கிடைக்க உதவி செய்ததற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரோனா ஊரடங்கு காலத்தில், விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை வேளாண் துறை மூலமாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு எவ்வித சிரமுமின்றி நேரடியாக விற்பனை செய்யப்பட்டது. பெருநகரங்களில் இதற்காக நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.
அதேபோல, தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மக்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை அவர்களின் இல்லத்திற்கே சென்று வழங்கிய வியாபாரிகளுக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து வகையிலும் அரசுக்கு ஒத்துழைப்பு கிடைத்த காரணத்தால்தான், இந்தச் சோதனையான நேரத்திலும் தமிழகத்தில் அதிக அளவில் பாதிக்காத வண்ணம் அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். மருத்துவமனைகள் மூலம் போதிய படுக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
நோய்த் தடுப்பு உபகரணங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. நடமாடும் மருத்துவக் குழுக்கள் நேரில் சென்று பரிசோதனை செய்து, நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் நாள்தோறும் 65 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதில், 74,640 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 119 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய நியமிக்கப்பட்ட அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டவர்களைக் கண்டறிந்து, உடனடியாகப் பரிசோதனைக்குட்படுத்தி தொற்று இருப்பின் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலமாக 2019-20 ஆம் ஆண்டில் 10,014 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. முதியோர் உதவித்தொகை வேண்டுமென்று முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலமாகவும் மற்றும் பொதுமக்கள் தானாக முன்வந்தும் அளித்த மனுக்களின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை இந்த மாவட்டத்தில் அதிகமான அளவில் உதவித்தொகை வழங்கப்பட்டு இருக்கின்றன.
முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலமாக பெறப்பட்ட 25,861 மனுக்களில் தகுதியான 13,178 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு இருக்கின்றன. இதில் முதியோர் உதவித்தொகை பெற்றவர்கள் 3,377 நபர்கள்.
இந்த மாவட்டத்தில் பசுமை வீடுகள் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடுகளை அதிக அளவில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். திருவாரூர் நகராட்சியில், அனைத்துக் குடியிருப்புகளுக்கும் பாதாள சாக்கடை, கழிவுநீர் வீட்டு இணைப்புத் திட்டத்தின் கீழ் 2,752 வீடுகள் இணைப்பைப் பெற்றிருக்கின்றன.
மன்னார்குடி நகராட்சியில் 7,342 குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணியில், தற்போது 1,212 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கூத்தாநல்லூர் நகராட்சியில், குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் 3,900 குடிநீர் இணைப்புகளில் தற்போது 555 குடிநீர் இணைப்புகளும், திருத்துறைப்பூண்டி நகரத்தில் 2,968 குடிநீர் இணைப்புகளில், தற்போது 566 குடிநீர் இணைப்புகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2020-2021 ஆம் ஆண்டில் 72 ஊராட்சிகளைச் சேர்ந்த 97 குக்கிராமங்களில் 14,740 வீடுகளுக்கு ரூபாய் 19 கோடி மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிக்கு ஒப்பந்தப் புள்ளிகள் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன.
திருவாரூர் மாவட்டத்தில் 8,321 மகளிர் சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றன. இக்குழுக்களுக்கு கடந்த மூன்றாண்டுகளில் ரூபாய் 588 கோடி வங்கி இணைப்பு கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது. அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் மூலம் கடந்த மூன்றாண்டுகளில் இந்த மாவட்டத்தில் 4,445 உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் 11.11 கோடி ரூபாய் மானியத்துடன் வழங்கப்பட்டிருக்கிறது.
நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி உப வடிநிலப் பகுதியிலுள்ள பாசன அமைப்புகளை விரிவுபடுத்துதல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டம் ரூபாய் 3,384 மதிப்பீட்டில் பரிசீலனையில் உள்ளது. இதுபோன்று பல்வேறு திட்டங்கள் பொதுப்பணித் துறையின் மூலமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திருவாரூர் மாவட்டத்தில், பொதுப்பணித் துறையின் மூலமாக பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. நீரொழுங்கிகள் பல இடங்களில் புனரமைக்கப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைத் துறையின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு உயர்மட்டப் பாலங்கள், ரயில்வே கடவின் குறுக்கே புதிய பாலங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. திருத்துறைப்பூண்டி நகருக்கு வேளாங்கண்ணி-திருத்துறைப்பூண்டி சாலையில் தொடங்கி மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி சாலை வரையில் சுமார் 2.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புறவழிச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்துள்ளது.
திருத்துறைப்பூண்டி நகருக்கு சுமார் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு புறவழிச் சாலை, திருவாரூர் நகருக்கு புறவழிச் சாலை, மன்னார்குடி நகருக்கு சுற்றுச்சாலை, வலங்கைமான் நகருக்கு புறவழிச் சாலை ஆகிய சாலைகள் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கூத்தாநல்லூர் நகருக்கு புறவழிச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.
நன்னிலம் நகருக்கு புறவழிச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு ரூபாய் 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை-திருத்துறைப்பூண்டி சாலை ரூபாய் 336.20 கோடி மதிப்பீட்டிலும் தஞ்சாவூர்-மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம்-கோடியக்கரை சாலை ரூபாய் 154 கோடி மதிப்பீட்டிலும் கும்பகோணம்-மன்னார்குடி-அதிராம்பட்டனம் சாலை ரூபாய் 191 கோடி மதிப்பீட்டிலும், இருவழித்தடச் சாலைகளாக அகலப்படுத்தி மேம்பாடு செய்ய நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
2016-17ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1,33,316 விவசாயிகளுக்கு ரூபாய் 161.21 கோடி நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் திருவாரூர் மாவட்டத்தில் பதிவு செய்திருந்த 5,65,392 விவசாயிகளில், இதுவரை, 3,64,523 விவசாயிகளுக்கு சுமார் 64 சதவிகித இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 1,100 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் உணவுப் பூங்கா ஒன்று தோற்றுவிக்கப்படும். மேலும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல், கிராமங்களில் வாழ்கின்ற ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி கற்க ஏதுவாக குடவாசல் மற்றும் நன்னிலத்தில் இரண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், வலங்கைமானில் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றும், கோட்டூரில் ஐடிஐ ஒன்றும் அரசால் உருவாக்கித் தரப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இதுபோன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பகுதியில் புதிய தொழில் தொடங்க வேண்டுமென்று அமைச்சர் தெரிவித்தார்கள். கரோனா காலத்திலும், தமிழகத்தில் மட்டும் சுமார் ரூபாய் 31,000 கோடி தொழில் முதலீட்டை இந்த 5 மாதங்களில் நாம் ஈர்த்திருக்கின்றோம். இந்தியாவிலேயே, கரோனா காலத்தில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடுதான்.
திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் தொழில்தான் பிரதான தொழிலாக இருக்கிறது. வேறு எந்தத் தொழிலும் பிரதானமாக இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார். அவரது கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளைபொருட்களைக் கொண்டு ஒரு புதிய தொழில் இந்த மாவட்டத்தில் தொடங்குவதற்கு அரசு முயலும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா வகையிலும் இந்த அரசு மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறது.
டெல்டா பகுதியான இந்தப் பகுதியில், கடைமடை பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு எவ்விதத் தடையும் இல்லாமல் நீர் கிடைப்பதற்காக கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு இருக்கின்றன. பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் தேக்கி வைத்து கோடை காலத்தில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக, திருவாரூர் மாவட்டத்தில் ஏரிகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு இருக்கின்றன.
தமிழக அரசு நீர் மேலாண்மைத் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசு பல்வேறு வகையில் திருவாரூர் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு முதல்வர் பழனிசமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT