Published : 27 Aug 2020 01:02 PM
Last Updated : 27 Aug 2020 01:02 PM
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடலூருக்கு ஆய்வு நடத்தச் சென்ற தமிழக முதல்வர், அங்குள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக.27) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற பணிகளுக்கான திட்டக் கல்வெட்டைத் திறந்துவைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் தொழில்துறை அமைச்சர் சம்பத், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிதம்பரம் பாண்டியன், காட்டுமன்னார்கோவில் முருகுமாறன், விருத்தாசலம் கலைச்செல்வன், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் முதலமைச்சர் வீடு கட்டும் திட்டத்தில் 6 பயனாளிகளுக்குத் தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டன. முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நெய்வேலி என்எல்சி பாய்லர் வெடி விபத்து நிவாரணம், சாலை விபத்து நிவாரணம் உள்ளிட்டவற்றுக்காக 6 பேருக்குக் காசோலைகள் வழங்கப்பட்டன. பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்பில் 6 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. மகளிர் திட்டம் சார்பில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு வேளாண்மை இயந்திரங்கள் வரக்கால்பட்டு ஊராட்சிக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டன.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டது. உணவுக் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 6 சுய உதவிக் குழுக்களுக்கு சுய வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக வங்கிக் கடன் வழங்கப்பட்டது. வேளாண்மைத் துறை சார்பில் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்திற்கு விவசாயிகளுக்கு மழைதூவான் கருவி வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மொத்தமாக ரூ.73 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT