Published : 24 Aug 2020 08:58 AM
Last Updated : 24 Aug 2020 08:58 AM

காவல் உதவி ஆய்வாளர் அடித்ததாக புகார்; சங்ககிரி அருகே சிவனடியார் தற்கொலை: எஸ்.ஐ.க்கு சாபம் விட்ட வீடியோ வெளியானதால் பரபரப்பு

நாமக்கல்

சங்ககிரி அருகே காவல் உதவி ஆய்வாளர் அடித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு சிவனடியார் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகாவுக்கு உட்பட்ட குண்டங்கல்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தறித் தொழிலாளி சரவணன் (42). கடவுள் பக்தி காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் சிவனடியாராக மாறியுள்ளார். இந்நிலையில் கடந்த 20-ம் தேதி அதே கிராமத்தில் ஒதுக்குபுறமான இடத்தில் பாறை இடுக்கு ஒன்றில் சிவனடியார் சரவணன் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த தேவூர் போலீஸார் பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தற்கொலை செய்து கொண்ட சிவனடியார் சரவணன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், தனது இறப்புக்கு, தேவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தான் காரணம், என்றும் அவர் தாக்கியதால் இந்த பரிசுத்தமான முடிவை எடுத்துள்ளதாகவும், தனது சாபம் அவரையும், அவரது குடும்பத்தையும் சும்மாவிடாது எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இதுகுறித்து சிவனடியார் சரவணனின் உறவினர் சித்துராஜ் கூறியதாவது: சிவனடியார் சரவணன் எனக்கு அண்ணன் முறை வேண்டும். அவருக்கு மனைவி, 16 வயதில் மகள், 14 வயதில் மகன் உள்ளனர். சரவணன் தறித் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடவுள் பக்தி காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சாமியாரானார். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வதால் அவரிடம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பலர் வந்து செல்வர்.

கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்வது அவரது வழக்கம். தனது வீட்டின் முன் ஜீவ சமாதியடைய பள்ளம் தோண்டி வைத்துள்ளார்.

இச்சூழலில் அவர் மது அருந்திவிட்டு பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் என புகார் எழுப்பியதேவூர் காவல நிலைய உதவி ஆய்வாளர், சரவணனை மிரட்டியுள்ளார். தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் மனவேதனையடைந்த சரவணன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நாங்கள் புகார் அளிக்கவில்லை என்றார்.

இதுகுறித்து சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் கூறியது: சாமியார் சரவணன் நடவடிக்கைகள் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு பிடிக்கவில்லை. வீட்டின் முன்னர் 6 அடி பள்ளத்தைத் தோண்டி வைத்திருந்துள்ளார். அவரது தவறான செயல்பாடுகள் குறித்து புகார் வந்ததால் தேவூர் எஸ்ஐ சென்று எச்சரித்து வந்துள்ளார். அப்போது அந்த குழியையும் மூடும்படி எச்சரித்துள்ளார். அடிக்கவில்லை. பிரேதபரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்.

எஸ்ஐ மீது நடவடிக்கை கோரி சேலத்தில் இன்று ஆர்ப்பாட்டம்

சிவனடியார் சரவணன் இறப்புக்கு காரணமானவராக குறிப்பிடப் படும் தேவூர் போலீஸ் எஸ்ஐ அந்தோணி மைக்கேல் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இன்று (24-ம் தேதி) இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அக்கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் பங்கேற்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x