Published : 21 Aug 2020 09:48 AM
Last Updated : 21 Aug 2020 09:48 AM
தமிழக மக்கள் பெரும்பாலானோரின் தாகத்தைத் தீர்த்து, தஞ்சை தரணியை செழிக்க வைத்துக் கொண்டிருக்கும் மேட்டூர் அணை, இன்று தனது 87-வது அகவையில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நாளில், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு உயரும் நிலையில் உள்ளது.
'வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி' என்ற சிறப்புடன் தமிழகத்தை செழிக்க வைக்கும் காவிரியின் குறுக்கே, மேட்டூரில் அணை கட்டுவதற்காக திட்டமிடப்பட்டு, 1834-ம் ஆண்டில் தொடங்கி 1924-ம் ஆண்டு வரை ஆய்வுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, 1925-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி அணை கட்டும் பணி தொடங்கியது.
பிரம்மாண்டமாக, 120 அடி உயரத்துக்கு நீரை தேக்கிடும் வகையில், மொத்தம் ரூ.4.80 கோடி செலவில், மேட்டூர் அணை 1934-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி கட்டி முடிக்கப்பட்டு, அதில் நீர் நிறுத்தப்பட்டது. அதன்படி, மேட்டூர் அணைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடப்பட வேண்டும்.
இன்று, மேட்டூர் அணை தனது 87-வது அகவையில் அடியெடுத்து வைத்துள்ளது. பிறந்த நாள் காணும் மேட்டூர் அணைக்கு, காவிரித்தாய் தனது பரிசாக, மீண்டும் வெள்ளமாக பொங்கி வந்து, சரிந்து கொண்டிருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டத்தை மீண்டும் உயர்த்தத் தொடங்க இருக்கிறாள்.
அணையின் சிறப்பு
மேட்டூர் அணை தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 16.50 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனத்துக்கான நீரை கொடுத்து, விவசாயிகளின் வாழ்க்கையை செழிக்க வைக்கிறது. மேலும், 25-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களின் தாகத்தைத் தீர்க்கும் வைக்கும் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை விளங்கி வருகிறது. 87-ம் ஆண்டில் தடம் பதிக்கும் மேட்டூர் அணை, நடப்பாண்டில், பாசன அட்டவணைப்படி, ஜூன் 12-ம் தேதியில் இருந்தே, பாசனத்துக்கான நீரை தற்போது வரை தடையின்றி வழங்கிக் கொண்டுள்ளது.
வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 17-ம் தேதி 99.03 அடியாக உயர்ந்தபோது, அணையின் நீர் மட்டம் ஓரிரு நாளில் 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீர் வரத்தில் தொடர் சரிவு ஏற்பட்டதால், அணையின் நீர் மட்டம் 19-ம் தேதியன்று 97.94 அடியாக குறைந்துவிட்டது.
குறிப்பாக, அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 16,500 கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்துக்காக விநாடிக்கு 500 கனஅடி வீதமும் நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், அணையின் நீர் வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 7,079 கனஅடியாக குறைந்தது. எனவே, அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டுவது கேள்விக்குறியானது.
இந்த நிலையில், அணைக்கான நீர் வரத்து அதிகரித்து நேற்று விநாடிக்கு 34 ஆயிரத்து 366 கனஅடியாக அதிகரித்தது. இதனால், அணையின் நீர் மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியது. இன்று (ஆக.21) காலை 8 மணியளவில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 99.81 அடியை எட்டியுள்ளது. எனினும், அணைக்கு நீர் வரத்து 27 ஆயிரத்து 845 கனஅடியாக குறைந்துள்ளது. நீர் வெளியேற்றத்தை விட, நீர் வரத்து அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று 100 அடியை எட்ட வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மேட்டூர் மக்கள் கூறுகையில், "தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் மேட்டூர் அணைக்கு, சுற்றுலா முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், கர்நாடகாவில் உள்ள பிருந்தாவன் பூங்கா போன்று அழகுபடுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT