Published : 20 Aug 2020 10:24 AM
Last Updated : 20 Aug 2020 10:24 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ரூ.73.53 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்; ரூ.169.77 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் பழனிசாமி.

வேலூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ரூ.73.53 கோடி மதிப்பிலான மூன்று புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டியும், 18 ஆயிரத்து 589 பயனாளிகளுக்கு ரூ.55.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (ஆக. 20) ஆய்வு செய்தார். இதற்காக வேலூர் வந்த முதல்வரை மாவட்ட ஆட்சியர்கள் சண்முகசுந்தரம் (வேலூர்), சிவன் அருள் (திருப்பத்தூர்), திவ்யதர்ஷினி (ராணிப்பேட்டை) ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு முதல்வர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ரூ.73.53 கோடி மதிப்பிலான மூன்று புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

மேலும், மூன்று மாவட்டங்களில் 18 ஆயிரத்து 589 பயனாளிகளுக்கு ரூ.169.77 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், மூன்று மாவட்டங்களில் ரூ.55 கோடி மதிப்பிலான 13 முடிவுற்ற திட்டப்பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார். மொத்தம் ரூ.298.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய திட்டப் பணிகளை தொடங்கியும், முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பினர், மகளிர் குழுவினர், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் கலந்துரையாடினார்.

கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், மூன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x