Published : 18 Aug 2020 07:46 AM
Last Updated : 18 Aug 2020 07:46 AM

சமூக இடைவெளியுடன் வரிசையில் வர ஏற்பாடு சென்னையில் டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: டோக்கன், முகக்கவசம் இல்லாவிட்டால் மது கிடையாது

சென்னை

சென்னையில் டாஸ்மாக் கடைகள்இன்று திறக்கப்பட உள்ளன.இதையொட்டி, சமூக இடைவெளியுடன் வாடிக்கையாளர்கள் வரிசையில் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. சென்னையில் கரோனா பாதிப்பு அதிகம் இருந்ததால் சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற அனைத்து பகுதிகளிலும் மே 7-ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. காலாவதி தேதியை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்த பீர் வகைகள் கிடங்குக்கு மாற்றப்பட்டன.

இந்த சூழலில், கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் சென்னை மண்டலத்தில் 720 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுகின்றன. இதனால், பீர் வகைகள் கிடங்கில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று லாரியில் கொண்டு வரப்பட்டன.

இதுமட்டுமின்றி, மது வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக நிற்பதற்காக டாஸ்மாக் கடைகள் முன்பு கட்டை கட்டுவது, தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளும் நேற்று முழுவீச்சில் நடந்தன.

மது வாங்க வருபவர்களுக்கு வழங்குவதற்காக அனைத்து கடைகளுக்கும் கடை எண் அச்சிடப்பட்ட டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு ஒருநாளில் 500 டோக்கன்கள் மட்டுமேவழங்க வேண்டும். கடை முன்பு பந்தல், மைக் செட் ஏற்பாடு செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்க 3 அடி இடைவெளிவிட்டு வண்ணம் அல்லது பிளீச்சிங் பவுடரால் 50 வட்டங்கள் அமைக்க வேண்டும். அவ்வப்போது கடையின் சுற்றுப்புறத்தில் பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

2 நபர்களுக்கு இடையில் சமூக இடைவெளி குறைந்தது 3 அடி இருக்க வேண்டும். கைகழுவும் திரவத்தால் கைகளை சுத்தம் செய்த பிறகே கவுன்ட்டரில் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும். கடைப் பணியாளர்கள் தற்போது வழங்கிய கையுறை, முகக்கவசம் உள்ளிட்டவற்றை அணிந்து பணிபுரிய வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றஉத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஒரு மணிநேரத்துக்கு 50 என்ற அடிப்படையில் டோக்கன் விநியோகம் செய்ய வேண்டும். டோக்கன், முகக்கவசம்இல்லாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு மதுபானங்களை விற்க கூடாது. கடைக்கு அருகில் மது அருந்த அனுமதிக்க கூடாது.

இதுதவிர, டாஸ்மாக் நிர்வாகம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை ஊழியர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்’’ என்றார்.

மால்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் இயங்காது. கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x