Published : 17 Aug 2020 05:33 PM
Last Updated : 17 Aug 2020 05:33 PM
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஸ்வீட் கடை உரிமையாளர், பொதுமக்களுக்குக் வைரஸ் எதிர்ப்பு மூலிகை பானத்தை 5 மாதங்களுக்கு மேலாக இலவசமாக வழங்கி வருகிறார்.
சிதம்பரம் தெற்கு வீதியில் ஸ்வீட் கடை வைத்திருப்பவர் கணேஷ். பொறியாளரான இவர் வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மூலிகை பானத்தை இலவசமாக வழங்கி வருகிறார். சுக்கு, ஏலக்காய், வெற்றிலை, மிளகு, கிராம்பு, துளசி, மல்லி, திப்பிலி, கிராம்பு, கற்பூரவல்லி, பனை வெல்லம், எலுமிச்சை, சீரகம் ஆகிய மூலிகைப் பொருள்களைக் கொண்டு இவர் கடையிலேயே பானம் தயார் செய்யப்படுகிறது.
பொதுமக்கள் பலர் காலையில் இருந்து மாலை வரை கடைக்குச் சென்று இந்த மூலிகை பானத்தை அருந்தி வருகின்றனர். ஒருநாளைக்கு 300 முதல் 400 பேர் இந்த பானத்தை அருந்திச் செல்கின்றனர். பொதுமக்கள் பலர் தினமும் வாடிக்கையாளர் போல அங்கு சென்று மூலிகை பானத்தை அருந்திச் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடைக்கு மூலிகை பானத்தை அருந்தச் செல்லும் பொதுமக்களிடம் கடைப் பணியாளர்கள் கை கழுவ வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி அங்குள்ள வாஷ்பேஸினில் பொதுமக்கள் கையைக் கழுவிய பிறகே மூலிகை பானம் தரப்படுக்கிறது.
இது குறித்துக் கடை உரிமையாளர் கணேஷ் கூறுகையில், ’’உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வருகின்றன. இந்த நிலையில் இந்தியர்களின் உணவுப் பழக்கவழக்கத்தால் இந்தியாவில் தொற்று மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைந்த அளவே உள்ளது. பல்வேறு அமைப்பினர் கரோனாவைக் கட்டுப்படுத்த கபசுரக் குடிநீர், ஆயுஷ் ஆல்பம் ஆகியவற்றைப் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
எங்கள் கடை சார்பில் தமிழகப் பாரம்பரிய மூலிகைப் பொருள்கள் கலந்த மூலிகை பானத்தை இலவசமாக வழங்கி வருகிறேன். இதன் மூலம் என்னால் முடிந்த அளவுக்கு கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுத்து வருகிறேன் என்ற மன திருப்தி கிடைக்கிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT