Last Updated : 16 Aug, 2020 06:18 PM

 

Published : 16 Aug 2020 06:18 PM
Last Updated : 16 Aug 2020 06:18 PM

குடிநீர் தொட்டியில் இறங்கிய இருவர் விஷ வாயு தாக்கி உயிரிழப்பு: மூவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி

உயிரிழந்த முருகேசன் - சஞ்சய்

நாமக்கல்

ராசிபுரம் அருகே புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டியில் இறங்கிய கட்டிட தொழிலாளர்கள் இருவர் விஷ வாயு தாக்கியதில் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மூவர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் முனியப்பம்பாளையம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அப்பகுதியில் புதியதாக வீடு கட்டிவருகிறார். இதற்காக குடியிருப்புப் பகுதியில் புதிதாக குடிநீர் தொட்டி கட்டியுள்ளார். பணிகள் முடிந்து 20 நாட்கள் ஆனதால் இன்று (ஆக.16) மதியம் தொட்டியை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த முட்டுகளை அகற்றும் பணியில் அதேபகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

தொட்டியினுள் ஒருவர் பின் ஒருவராக 5 பேர் இறங்கியுள்ளனர். அப்போது விஷவாயு தாக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 5 பேரும் தொட்டியினுள் மயங்கி விழுந்துள்ளனர். இதில் முருகேசன் (45), சஞ்சய் (22) ஆகிய இரு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தவமுருகன் (19), சிரஞ்சீவி (24), ஆறுமுகம் ஆகிய 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினரை சமூகநலத்துறை அமைச்சர் வெ. சரோஜா நேரில் சந்தித்து விசாரணை நடத்தி ஆறுதல் கூறினார்.

பின், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் நடைபெற்ற இடத்தை சமூக நலத்துறை அமைச்சர் வெ.சரோஜா, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், நாமக்கல் மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ், கோட்டாட்சியர் கோட்டைகுமார் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x