Published : 13 Aug 2020 07:06 AM
Last Updated : 13 Aug 2020 07:06 AM

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், மன்னார்குடியை அடுத்த பைங்காநாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்

தனது தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோருடன் கமலா ஹாரிஸ்.

திருவாரூர்

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும்நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ எதிர்த்து ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ்(55) போட்டியிடுகிறார்.

இவரது தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பைங்காநாடு கிராமத்தை சேர்ந்தவர்கள். ஸ்டெனோகிராஃபர் ஆக வாழ்க்கையை தொடங்கிய கோபாலன், ஆங்கிலேய அரசில் சிவில் சர்வீஸ் பணியில் பணியாற்றியவர். 1930-ம் ஆண்டு ஜாம்பியா நாட்டுக்கு கொடிசியாவில் இருந்து வந்த அகதிகளை கணக்கெடுப்பு செய்வதற்காக இந்திய அரசு சார்பில் அனுப்பிவைக்கப்பட்டார். பின்னர் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.

இவருக்கு பிறந்த 2 பெண் குழந்தைகளில் சியாமளா கோபாலன் என்பவருக்கு மகளாகப் பிறந்தவர்தான் கமலா ஹாரிஸ். இவர் சட்டப்படிப்பு பயின்றவர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோ மற்றும் கலிஃபோர்னியாவில் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்துள்ளார். இவரது கணவர் டக்ளஸ் ஆவார்.

இவர், கடந்த 2019-ம் ஆண்டில் ட்ரூஸ் வி ஹோல்டு (Trues We Hold) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், தனது தாத்தா குறித்து பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். தனக்கு ஊக்க சக்தியாக தாத்தாதிகழ்வதாகவும் கடந்த 1991-ம்ஆண்டு சென்னையில் தனது தாத்தாகோபாலனுக்கு 80-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டபோது சென்னை வந்திருந்ததாகவும் அங்கு அனைத்து குடும்பத்தினரும் கூடியிருந்தது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிடுகிறார் என்பதும், தங்கள் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட கோபாலன் என்பவரின் பேத்தி இத்தகைய உயர்ந்த பதவிக்கு போட்டியிடுவதன் மூலம் தங்களது பைங்காநாடு கிராமம் உலகப்புகழ் பெற்றுவிட்டதாகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகபதவியேற்கும் நாளை எதிர்பார்த்திருப்பதாகவும் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பைங்காநாடு அருகிலுள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவுக்கு கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் நன்கொடை அளித்துள்ளதாக கோயிலை நிர்வகித்து வரும் ரமணி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x