Published : 09 Sep 2015 12:45 PM
Last Updated : 09 Sep 2015 12:45 PM

சிறைகளில் மனநல மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

தமிழக சிறைகளில் காலியாக உள்ள மனநல மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்த மா.முத்துக்குமார் (34) உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழக சிறைகளில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட ஆண், பெண் கைதிகளை சிறைக்கு வெளியே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும், அவர்களை விடுதலை செய்யவும், சிறையில் மனநல மருத்துவர், உளவியல் நிபுணர் மற்றும் செவி லியர்களை நியமனம் செய்யவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தமிழக உள்துறை செயலரின் தனிச் செயலர் ஆரச்செல்வி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வாரம் ஒரு முறை மதுரை மத்திய சிறைக்கு வந்து கைதிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். கைதிகளுக்கு மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சிறை கைதிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை மத்திய சிறையில் 35 மனநலம் பாதித்த கைதிகள் உள்ளனர். அவர்களில் 5 பேர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகின்றனர். இரு கைதிகளை சென்னைக்கு அனுப்ப உத்தரவுக்காக காத்திருக்கி றோம். தமிழக சிறைகளில் இருந்து இதுவரை மனநல பாதிப்புக்காக 44 கைதிகள் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

சிறைகளில் 13 மனநல மருத்து வர்கள் பணியிடங்கள் உள்ளன. திருச்சி, கோவை சிறையில் மனநல மருத்துவர்கள் உள்ளனர். 2013-ல் 6 மனநல மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். எஞ்சிய 5 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் ஆள்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். 18 மனநல ஆலோசகர் பணியிடங்கள் உள்ளன. இதில் 17 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. எஞ்சிய ஒரு இடம் விரைவில் நிரப்பப்படும். எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x