Published : 09 Aug 2020 06:09 PM
Last Updated : 09 Aug 2020 06:09 PM

தேசிய கல்விக் கொள்கை: சமஸ்கிருதத்துக்குத் தனிச் சலுகை; தமிழுக்குக் கீழிறக்கம்; கி.வீரமணி விமர்சனம்

கி.வீரமணி: கோப்புப்படம்

சென்னை

சமஸ்கிருதத்திற்குத் தனிச் சலுகை - தனி சிம்மாசனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழுக்குக் கீழிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தேசியக் கல்விக் கொள்கை குறித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (ஆக.9) வெளியிட்ட அறிக்கை:

''மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை பற்றி நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில் கல்வி நிபுணர்கள் எழுப்பியுள்ள எந்தக் கேள்விகளுக்கும் விடை தரவில்லை; விளக்கம் அளிக்கவும் இல்லை. வெறும் வார்த்தை ஜாலங்கள்தான் பெரிதும் இடம்பெற்றன.

அவரது உரை மக்களின், கல்வியாளர்களின், சமூக ஆர்வலர்களின் ஐயங்களைப் போக்கும் வகையில் - தெளிவுபடுத்தும் வகையில் அமையவில்லை.

இந்தத் தேசியக் கல்விக் கொள்கையில் எது மிகவும் நெருடலான, முதலாவது அடிப்படையான அம்சம் எது என்றால், இந்தியா பன்முகத்தன்மை கொண்ட, பல மொழிகள், கலாச்சாரங்கள், நாகரிகம், பண்பாடுகளைக் கொண்ட ஒரு நாடு என்பதையும் மறந்து, கல்வியையும் அவரவர்களின் கலாச்சாரத்தையும், மொழியையும் ஒற்றை அளவுகோலால் அளப்பது ஆகும்!

இந்திய அரசமைப்புச் சட்டப்படி, கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள ஒன்று. மத்தியிலும் கல்வி அமைச்சர், கல்வித் துறை, கல்விப் பாடத்திட்டம் என்பவை உண்டு. மாநிலங்களிலும் அதுபோல தனியே கல்வி அமைச்சர், கல்வித் துறைகள், கல்விக்கான பாடத் திட்டம் எல்லாம் உண்டு. காரணம், இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு.

நாடு முழுவதற்கும் ஒரே கல்வித் திட்டம் என்று கூறுவதும், மாகாணங்களே மாநில ஆட்சிகளே இருக்காமல், கூட்டாட்சிக்குப் பதில் ஒற்றை ஆட்சிதான் இருக்க வேண்டும் என்பதைப் பின்னணியாக, மூலக் கருவாகக் கொண்டுதான் இந்தப் புதிய கல்வித் திட்டத்தை ஒரு கருவியாக பயன்படுத்துவதாகவே துல்லியமாகத் தெரிகிறது.

சமஸ்கிருதம், இந்தி இவற்றுக்கு மட்டும் தனிப் பெருமையும், வாய்ப்பும் அளிப்பது, ஆர்எஸ்எஸ் கொள்கைச் செயல்பாடு என்பதைத் தவிர வேறு என்ன?

130 கோடி மக்களில் வெறும் 24 ஆயிரம் மக்கள் பேசும் மொழிதான் சமஸ்கிருதம்! அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் உள்ள மொழிகள் 22. அவற்றில் மக்கள் மிக மிகக் குறைவாகப் பேசும் மொழி, 130 கோடி மக்களில் வெறும் 24 ஆயிரம்.

'அது செம்மொழி அல்லவா?' என்று கூறி, அதற்கு தனி சிறப்பு காட்டப்படுவதை சமஸ்கிருதப் படையெடுப்பாளர்கள் நியாயப்படுத்த முயலக்கூடும்!

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசுதான் தமிழுக்குச் செம்மொழித் தகுதியை அதிகாரபூர்வமாக ஆணை பிறப்பித்து அறிவித்தது; அதற்கு முழுக்க முழுக்க மறைந்த திமுக தலைவர் கருணாநிதி எடுத்தத் தொடர் முயற்சிதான் காரணம்; அதனையொட்டிதான், சமஸ்கிருதத்திற்கும் செம்மொழித் தகுதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த 22 மொழிகளில் வேறு சில மொழிகளும் செம்மொழித் தகுதியை எப்படியோ பெற்றுவிட்டன!

இந்நிலையில், தமிழ் மொழி உலகில் ஏழரை கோடி மக்கள் பேசும், நவீன மொழியாக, மூத்த மொழியாக உள்ளது. அந்தத் தமிழ், செம்மொழித் தகுதி பெற்ற தமிழ் இந்தக் கல்வித் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டு, புறந்தள்ளப்பட்டுள்ளது. மோடி ஆட்சி மத்தியில் அமைந்த காலம் முதல்கொண்டே, தமிழ்நாட்டில் உள்ள ஓர் ஆட்சியின் அலட்சியத்தையும், அரசியல் பார்வையையும் பயன்படுத்தி, செம்மொழி நிறுவனத்தையே முடக்கிப் போட்டு, அதற்குரிய தனித் தன்மையோடு இயங்கவிடாமல், அதில் அறிவிக்கப்பட்ட செம்மொழித் தமிழ் ஆய்வுக்குரிய விருதுகளைக்கூட அளிப்பதில்லை. இப்போது நிரப்பப்பட்ட இயக்குநர் அதற்குரிய தகுதி உடையவரே அல்ல.

தேசிய கல்விக் கொள்கைப்படி, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தையே மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைத்துவிட்டு, பொத்தாம் பொதுவில் பத்தில் ஒன்றுபோல் ஆக்கி, அதன் சிறப்புத் தகுதியை அகற்றிவிட்டதற்கு மூலகாரணம் என்ன?

அந்நியர்களான ஆங்கிலேய ஆதிக்கத்தின்போதுகூட தமிழ் ஏற்றம் பெற்றது. பல வெளிநாட்டவர்கள் தமிழுக்குப் பெருமை சேர்த்தனர். திருக்குறளை தமிழை அதன் சிறப்பைப் பன்னாட்டு மக்களும் உணரச் செய்தனர். தமிழைக் கேவலப்படுத்தியதில்லை.

செம்மொழித் தகுதி தமிழுக்கும் உண்டு; சமஸ்கிருதத்திற்கும் உண்டு என்றால், சமஸ்கிருதத்திற்குத் தரும் அதே முக்கியத்துவம், முன்னுரிமை, சிறப்புரிமைகளைத் தமிழுக்குத் தர வேண்டாமா? இதர இந்திய மொழிகள் சமஸ்கிருதத்தைவிட அதிகம் பேர் பேசும் கூடுதல் தகுதி பெற்றவை.

எம்மொழி, செம்மொழித் தமிழ், சில உலக நாடுகளில் ஆட்சி மொழிகளாகவே உள்ளது. அரசுப் பணிமனைகளில் ஆட்சி புரிகின்றது. சிங்கப்பூர், மலேசியா, ஏன் கனடாவில் கூட இதற்குரிய சிறப்பை ஒப்புக் கொள்கின்றனர்.

ஆனால், இங்கே செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தைக்கூட தனியான சிறப்பு நிறுவனமாக இயங்க, இந்தத் தேசியக் கல்விக் கொள்கை விடவில்லையே!

தமிழ் மொழிப் பற்று? கண்ணில் மிளகாய்ப் பொடி தூவுவது என்பதைத் தவிர, வேறொன்றுமில்லை. அங்கொன்றும், இங்கொன்றும் திருக்குறளைக் கூறினால் போதுமா?

மொழி என்பது ஒரு பண்பாட்டின், நாகரிகத்தின் அடையாளம் அல்லவா? ஏன் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை?

சமஸ்கிருதத்திற்குத் தனிச் சலுகை, தனி சிம்மாசனம்!

தமிழுக்குக் கீழிறக்கம். இதுதானே புதிய கல்விக் கொள்கை, பதில் சொல்லட்டும்... பரிகாரம் கூறட்டும்.
புரிந்துகொள்வீர்".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x