Published : 08 Aug 2020 08:07 PM
Last Updated : 08 Aug 2020 08:07 PM
தமிழ்நாட்டில் தினமும் 68 ஆயிரம் பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது, டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் கரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை 80 விழுக்காட்டை எட்டியுள்ளது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (ஆக.8) ஆய்வு செய்தார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
"தமிழ்நாட்டில்தான் ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை 30 லட்சத்து 88 ஆயிரம் பேருக்குச் செய்யப்பட்டுள்ளது. மூத்த மருத்துவ வல்லுநர்கள் குழுவினரின் கருத்துப்படி ஒரு வாரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் மொத்த எண்ணிக்கையை விட பத்து மடங்கு பரிசோதனையைச் செய்யும்போது பாதிக்கப்படும் நபர்களை விரைவாகக் கண்டறிந்து அவர்கள் மூலம் மற்றவர்களுக்குத் தொற்று பராவாமல் தடுக்க முடியும்.
கடந்த சில நாட்களில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 5,000 இல் இருந்து 7 ஆயிரம் அதிகரித்தது. தற்போது நாள் ஒன்றுக்கு 68 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் 6,000-க்கும் குறைவாக இருக்கிறது.
தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் 52 ஆயிரத்து 752 பேர். இது 19 விழுக்காடாக இருக்கிறது. இறப்பு விகிதம் 1.64 விழுக்காடாக இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உயிரிழப்பவர்களில் முதியவர்கள் அதிகம் என்பதால் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க தனி கவனம் செலுத்தப்பட உள்ளது. நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், உடல் பருமனாக இருப்பவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது தொடர்பாக சிஎம்சி மருத்துவர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளோம்.
தமிழ்நாட்டில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அதிக வரவேற்பு இருக்கிறது. சென்னை, மதுரை, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி கிங் ஆய்வு மையத்தில் மட்டுமே கரோனா பரிசோதனை வசதி இருந்தது. இப்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை ஆய்வகம் உள்ளது. விரைவில் ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆய்வகம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் கூடுதலாக 150 ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. தேவை இருந்தால் வாடகை ஆம்புலன்ஸ்களையும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா வராமல் தடுக்க முகக்கவசம் அணிவது, தள்ளி நிற்பது, கைகளைக் கழுவுவதைப் பின்பற்ற வேண்டும். நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ள முதியோர், ஆஸ்துமா இருப்பவர்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாட வேண்டாம். வேலைக்குச் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அடுத்த 3 மாதத்துக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன.
கரோனாவுக்கு நேரடி மருந்துகள் இல்லாத நிலையில் மருத்துவக் குழுவினரின் செயல்பாடுகளால் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 80 விழுக்காட்டை எட்டும் நிலையில் இருக்கிறது. எனவே, காய்ச்சல் இருந்தால் காலதாமதம் இல்லாமல் பரிசோதனை செய்துகொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும்".
இவ்வாறு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT