Last Updated : 05 Aug, 2020 05:28 PM

 

Published : 05 Aug 2020 05:28 PM
Last Updated : 05 Aug 2020 05:28 PM

உயர் நீதிமன்ற ஆணைப்படி மாணவர்களுக்கு வீட்டிலேயே முட்டை வழங்கப்படும்: அமைச்சர் வீ.சரோஜா தகவல்

ராமநாதபுரம்

உயர் நீதிமன்ற ஆணை கிடைத்ததும் முதல்வர் பழனிசாமி வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவர்களுக்கு வீட்டிலேயே முட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வீ.சரோஜா தெரிவித்தார்.

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு, குழந்தைகள் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்த துறை அலுவலர்களுடன் சமூக நலத்துறை அமைச்சர் வீ.சரோஜா ஆய்வு செய்தார்.

ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் எம்.மணிகண்டன் (ராமநாதபுரம்), சதன் பிரபாகர் (பரமக்குடி), ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதனையடுத்து அமைச்சர் வீ.சரோஜா செய்தியாளர்களிடம் கூறுகையில் "சத்துணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு வீட்டிலேயே முட்டை வழங்க உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்த ஆணை கிடைத்ததும் முதல்வர் பழனிசாமி வழிகாட்டுதலின்படி முட்டை வீட்டிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வுகளில் 1.10 லட்சம் அங்கன்வாடிப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.133.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் ரூ.1,000 கரோனா நிதி வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளையும் ஆன்லைனில் விண்ணப்பிக்கச் சொல்லி, இந்நிதி வழங்கப்படுகிறது. இந்நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ. 667 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காட்டில் மாற்றுத்திறனாளிகள் திறன்வளர்ச்சி, பயிற்சி, கல்வி ஆகியவை வழங்க ஒருங்கிணைந்த தேசிய மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பூவிந்தவல்லியில் பார்வையற்றோருக்கான தேசிய மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் அனைத்து பயிற்சி, ஆராய்ச்சி மேற்கொள்ளவும், அவர்களுக்கு கல்வி வழங்கவும் மதுரை யு.புதுப்பட்டியில் 5 ஏக்கர் பரப்பில் தேசிய மறுவாழ்வு மாற்றுத்திறனாளிகள் மையம் மத்திய அரசு அமைக்க உள்ளது.

இம்மையத்தை தற்காலிக கட்டிடத்தில் விரைவில் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் மேலும் 5 லட்சம் முதியோர் உதவித் தொகை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். தற்போது 29.50 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு அரசு ரூ. 4,315 கோடி முதியோர் நலனுக்காக ஒதுக்கியுள்ளது. முதியோர் நலனில் சிறப்பாக செயல்பட்டதற்காக குடியரசுத் தலைவர் விருதையும் தமிழகம் பெற்றுள்ளது.

மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தில் ரத்த சோகை இல்லாத குழந்தைகளை உருவாக்க 2 ஆண்டுகள் இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இந்த இலகை்கை குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழக அரசு நிறைவேற்றும்" என அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x