Published : 18 May 2014 12:31 PM
Last Updated : 18 May 2014 12:31 PM

அதிமுகவின் வெற்றியால் இலங்கை தமிழர்கள் நம்பிக்கை: ஜெயலலிதாவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடிதம்

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்துள்ள வெற்றியால் இலங்கை தமிழர்கள் மிகுந்த நம்பிக்கை பெற்றுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த கூட்டமைப்பைச் சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் கே.பிரேமச்சந்திரன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

“உங்களது உன்னதமான தலைமையின் கீழ் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெற்ற மாபெரும் வெற்றிக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானங்களை நிறைவேற்றியதற்காக இந்த தருணத்தில் இலங்கைத் தமிழர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தற்போதைய தேர்தலில் அதிமுக பெற்றுள்ள மாபெரும் வெற்றியானது, சட்டப்பேரவை தீர்மானங்களை செயல்படுத்துவதற்கு மேலும் வலிமையைத் தரும் என நாங்கள் நம்புகிறோம்.

இலங்கையில் போர் முடிந்த பிறகு, மீதமிருக்கும் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளன. இலங்கை அரசு தனது முழு அதிகாரத்தையும், ராணுவத்தையும் பயன்படுத்தி தமிழ் மக்களின் நிலங்களையும், வாழ்வாதாரங்களையும் பறித்து வருகிறது. நாளுக்கு நாள் தமிழர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்தபடி உள்ளன.

தமிழர்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளை நசுக்கும்படி அனைத்து அரசு அமைப்புகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இலங்கை ராணுவம் மற்றும் உளவு அமைப்புகள் இரும்புக் கரம் கொண்டு தமிழ் மக்களின் குரலை அடக்கி வருகின்றன.

இந்த இக்கட்டான சூழலில், தமிழர்கள் என்ற அடையாளத்தோடு தொடர்ந்து வாழ்வதற்கான எங்களின் உரிமைகளையும், சுய மரியாதையையும் காக்கும் வகையில் நீங்கள் உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என இலங்கைத் தமிழர்கள் மிகவும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக தங்களைச் சந்தித்து மேலும் விரிவாக விவாதிப்பதற்காக எங்களுக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x