Published : 03 Aug 2020 06:02 PM
Last Updated : 03 Aug 2020 06:02 PM
கரோனா வைரஸ் தொற்றை ஆரம்பக்கட்ட நிலையில் அறிந்தவுடன் சிகிச்சை மேற்கொண்டால் உயிரைப் பாதுகாக்கலாம் என்பதற்கு நான் உதாரணம் என, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி இன்று (ஆக.3) ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியமாகும். கரோனா வைரஸ் தொற்றால் நான் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளேன். 40 நாட்கள் மருத்துவ சிகிச்சை பெற்று திரும்பி வந்துள்ளேன். வைரஸ் தொற்றை ஆரம்பக்கட்ட நிலையில் அறிந்தவுடன் சிகிச்சை மேற்கொண்டால் உயிரைப் பாதுகாக்கலாம் என்பதற்கு நான் உதாரணம்.
எனவே, மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளாமல் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும். கரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் அனைவருக்கும் சித்த மருத்துவ சிகிச்சையான கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் இறந்த மூவரில் இருவர் வயதானவர்கள். இருவரும் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.
இ-பாஸைப் பொறுத்தவரை உரிய காரணம் இருந்தால் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்க உள்ளார். இந்த வாரம் மதுரை, திருநெல்வேலி செல்கிறார். அடுத்த முறை நாமக்கல் மாவட்டம் வர உள்ளார்.
டாஸ்மாக் பணியாளர்கள் கரோனா பாதிப்பால் இறந்ததால் ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. மின் கட்டணம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வசூலிக்கும் முறை பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படுகிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் இருந்த காரணத்தினால் கட்டணம் அதிகம் வந்துள்ளது. மாதம் ஒரு முறை வசூலிப்பது உள்ளிட்டவை தொடர்பாக முதல்வரிடம் கலந்தாலோசனை நடத்தப்படும்".
இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி மருத்துவ சிகிச்சைக்குப் பின் முழுவதுமாகக் குணமடைந்து தனது வழக்கமான பணிகளுக்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT