Published : 03 Aug 2020 09:14 AM
Last Updated : 03 Aug 2020 09:14 AM
ஈரோடு / நாமக்கல்/ சேலம் / கிருஷ்ணகிரி
கரோனா ஊரடங்கு காரணமாக காவிரிக்கரையோரங்களில் பொது மக்கள் கூட தடை விதிக்கப் பட்டதால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது.
ஈரோடு மாவட்ட காவிரிக்கரையோரங்களில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடும்பத்துடன் காவிரி ஆற்றின் கரையில் கூடி, புனித நீராடி, ஆற்றின் கரையில் படையலிட்டு இயற்கையையும், குலதெய்வத்தையும் வழிபடுவது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
முதல் ஆடிப் பெருக்கு விழாவை கொண்டாடும் புதுமண தம்பதியினர், திருமணத்தில் சூட்டிய மலர் மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு காவிரி தாயை வணங்குவர். சுமங்கலி பெண்கள் பழைய தாலி சரடுகளை அகற்றி, புதிய தாலிகயிற்றை கட்டிக் கொள்வர்.இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக, காவிரி ஆற்றின் கரையில் பொதுமக்கள் ஒன்றுகூடவும், வழிபாடு நடத்தவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்ததால், காவிரிக்கரையோரங்கள் நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டன. ஆடிப்பெருக்கின் போது, பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்ஒன்று கூடி வழிபாடு செய்வதுவழக்கம். இந்த ஆண்டு, தடை காரணமாக கூடுதுறையில் பக்தர்கள் கூட அனுமதிக் கப்படவில்லை. அப்பகுதியில்அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு, தடுப்புவேலிகளை அமைத்த போலீஸார் கண் காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதுபோல் கொடுமுடி மகுடேஸ் வரர் கோயில் மற்றும் ஆற்றங்கரை பகுதி, கருங்கல்பாளையம் காவிரிக்கரையோரப் பகுதிகளில்மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப் பட்டதால் வெறிச்சோடிக் காணப்பட்டது.
நாமக்கல்
கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்தாண்டு கொல்லிமலை வல்வில் ஓரி விழா ரத்து செய்யப்பட்டது.
மேலும், சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வருவதை தடுக்கும் வகையில் மலையடிவாரமான காளப்பநாயக்கன்பட்டியில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் காவிரி ஆறு பாய்ந்து செல்லும் மோகனூர், பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதியில் மக்கள் புனித நீராடி வழிபாடு நடத்துவது வழக்கம். இதற்கும் தடைவிதிக்கப் பட்டுள்ளது. தடையை மீறி காவிரி ஆற்றுக்கு வருவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், காவிரி கரையோரம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
வெறிச்சோடிய மாமாங்கம்
ஆண்டுதோறும் ஆடிப் பெருக் கன்று சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஊற்றுக் கிணறுக்கு பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் இருந்து உற்ஸவர்கள் எடுத்துவரப்பட்டு, தீர்த்தவாரி நடத்தப்படும். இதேபோல், மக்கள், குடும்பத்தோடு மாமாங்கம் பகுதியில் குவிந்து, ஊற்று நீரில் புனித நீராடுவர். நேற்று ஊரடங்கு காரணமாக, மாமாங்கம் பகுதி எவ்வித கொண்டாட்டங்களும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
சேலத்தில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில், பூட்டு முனியப்பன் கோயில், வெண்ணங்கொடி முனியப்பன் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் மட்டுமே நடத்தப்பட்டன. புனித நீராடுதல் பகுதிகளான மேட்டூர், கல்வடங்கம், பூலாம்பட்டி உள்ளிட்ட இடங்களும் வெறிச்சோடியது. அப்பகுதிகளில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கிருஷ்ணகிரியில் எச்சரிக்கை
தளர்வில்லா முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டதால், பொதுமக்கள் கிருஷ்ணகிரி அணைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அணையின் நுழைவுவாயில், பொதுப்பணித்துறை அலுவலகம், காவல் நிலையம், புனித நீராடும் இடம், அணையின் 2-வது நுழைவுவாயில் என 5 இடங்களில் மகாராஜகடை இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அணையில் குளிக்க இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT