Last Updated : 02 Aug, 2020 08:36 PM

 

Published : 02 Aug 2020 08:36 PM
Last Updated : 02 Aug 2020 08:36 PM

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு யோகாவுடன் நடனம், இளையராஜா பாட்டுடன் நிலாச்சோறு; சித்த மருத்துவர்கள் அசத்தல்!

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் மருத்துவ சிகிச்சைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கேட்டறிந்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில், சித்த மருத்துவம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு யோகாவுடன் நடனம், இளையராஜா பாட்டுடன் நிலாச்சோறு, மூலிகை சூப் வழங்கி மருத்துவர்கள் அசத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சித்த மருத்துவம் சார்பில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 50 படுக்கை வசதிகளைக் கொண்ட இந்த மையத்தில் 42 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஜூலை 17-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த மையத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பாரம்பரிய முறைப்படி உணவு வகைகள், உடற்பயிற்சி, யோகா, மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதால் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வெகு விரைவாக குணமடைந்து வீடு திரும்புவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது மட்டுமின்றி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை வர தினமும் தியானப் பயிற்சி, மனதை ஒருநிலைப்படுத்த சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம், சித்த மருத்துவ மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வி.விக்ரம்குமார் கூறியதாவது:

''திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியர் சிவன் அருளிடம் அனுமதி கேட்டோம். அதன்படி, நாட்றாம்பள்ளியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 42 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்குக் கரோனா தொற்றை விரட்ட மருந்து, மாத்திரைகள் மட்டும் போதாது. பாரம்பரிய முறைப்படி உணவு மற்றும் ஆலோசனைகளை வழங்க முடிவு செய்தோம். அதன்படி, தினமும் காலை 7 மணிக்கு கபசுரக் குடிநீர், 8 மணிக்கு சிற்றுண்டி, காலை 10 மணிக்கு ஆடாதுடை கசாயம், 11 மணிக்கு தூதுவாளை, முடக்கறுத்தான் மூலிகை சூப், பகல் 1 மணிக்கு மதிய உணவு (சைவம்), மாலை 3 மணிக்கு காய்கறி சூப், 4 மணிக்கு சுண்டல், கம்பு ரொட்டி, தினைப்பாயாசம், கேழ்வரகு, கம்பு லட்டு, பாசிப்பயிறு, கொண்டைக் கடலை என வாரத்துக்கு ஒன்று எனத் தொடர்ச்சியாக வழங்கி வருகிறோம்.

மாலை 6 மணிக்கு மீண்டும் கபசுரக் குடிநீர், சர்க்கரை நோயாளிகளுக்கு அவரைக் குடிநீர் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகாசனம், நடனம் கற்றுத் தரப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு இளையராஜா பாட்டுடன் அனைத்து நோயாளிகளும் சமூக இடைவெளியைப் பின்பற்றி தரையில் அமர்ந்து நிலாச்சோறு வழங்கி வருகிறோம்.

மேலும், அவ்வப்போது கரோனா நோயாளிகளுக்கு மன வலிமையைப் பெருக்க மனநல ஆலோசனைகள், மன அழுத்தத்தைக் குறைக்க உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் தினமும் சினிமா நகைச்சுவைக் காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. ‘வாய் விட்டுச் சிரித்தால், நோய் விட்டுப் போகும்’ என்பதால் இந்தப் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளோம்.

மேலும், சிறுவர், சிறுமியர் விளையாடி மகிழ ஊஞ்சல், இசை நாற்காலி போன்ற விளையாட்டுகளும் இங்கு உள்ளன. ஒரு நோயாளியை மருந்து, மாத்திரைகளைக் கொண்டு குணப்படுத்துவதை காட்டிலும் சுற்றுச்சூழல், தன்னம்பிக்கை, நோய் எதிர்ப்பு ச்சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை வழங்கினாலே போதும் என்பதால் இதுபோன்ற முயற்சிகளைக் கடைப்பிடித்து வருகிறோம். அதற்கு நல்ல தீர்வும் கண்டுள்ளோம்''.

இவ்வாறு மருத்துவர் விக்ரம்குமார் தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசி.கண்ணம்மா கூறியதாவது:

''திருப்பத்தூர் மாவட்டத்தில், சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் கடந்த மாதம் 42 பேர் அனுமதிக்கப்பட்டனர். அதில், நாங்கள் அளித்த மருத்துவ சிகிச்சையில் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ளவர்களில் சிலர் இரண்டொரு நாளில் அவர்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள். இந்த மையத்தில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள் தாங்கள் மருத்துவமனையில் தங்கியுள்ளோம் என்ற நினைவே வரக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 24 மணி நேரமும் நோயாளிகளைக் கண்காணிக்க 2 சித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளனர். அதுதவிர பாரம்பரியமிக்க, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவு வகைகளைச் சமைக்க கைதேர்ந்த சமையல் கலைஞர்களும் இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு சுசி.கண்ணம்மா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x