Published : 30 Jul 2020 10:32 AM
Last Updated : 30 Jul 2020 10:32 AM

திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட நேரடி கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகள்: உரிய நேரத்தில் கொள்முதல் செய்து, சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல வலியுறுத்தல்

திருவாரூர்/ தஞ்சாவூர்

திருவாரூர் அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் 24,336 ஏக்கர் பரப்பளவில் முன்பட்ட குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. தற்போது அறுவடை நடைபெற்றுவரும் நிலையில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகள் விற்பனைக்காக வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக பெய்துவரும் மழையால் முன்பட்ட குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, அறு வடை தருணத்தில் உள்ள நெற் கதிர்கள் மழையால் சேதமடைந்து வருகின்றன. மேலும், மாவட்டத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உரிய நேரத்தில் சேமிப்புக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படாததால், தற்போது மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.

திருவாரூர் அருகே புளிச்சகாடி என்ற இடத்தில் செயல்பட்டு வரும் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கடந்த 5 நாட்களுக்கு முன்னர் கொள்முதல் செய்யப்பட்ட 4,000-க் கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே வைக்கப்பட்டிருந்தன. அந்த நெல் மூட்டைகள் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்தாலும், கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் பெய்துவரும் மழையால் அவை நனைந்துவிட்டன. இதனால், மூட்டைகளில் உள்ள நெல்மணிகள் முளைவிடத் தொடங்கிவிட்டன.

மேலும், அப்பகுதி விவசாயிகள் சிலர் நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவந்து விற்பனைக்காக வைத்திருந்த நெல் மூட்டைகளும் சேதமடைந்துள்ளன. எனவே, மழைக்காலங்களில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் அன்றாடம் கொள்முதல் செய்யப்படும் மூட்டைகளை உடனுக்குடன் சேமிப்புக் கிடங்குக்கு எடுத்துச் சென்று, உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில்...

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட கோடை பருவ நெல்லை விற் பனை செய்வதற்காக விவசாயி கள் அப்பகுதியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக் குக் கொண்டு சென்றனர். ஆனால், கொள்முதல் நிலையத் தில் இடப்பற்றாக்குறை காரண மாக, வெளியே சாலையோரத் தில் நெல்மணிகள் குவித்துவைக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், தொடர் மழையால் இந்த நெல்மணிகள் நனைந்து வீணாகி வருகின்றன.

இதேபோல, மாவட்டம் முழு வதும் தற்போது பெய்யும் மழையின் காரணமாக நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.

இந்த நெல்லை காயவைத்து மீண்டும் விற்பனை செய்ய கொள்முதல் நிலையங்களில் வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, கொள்முதல் நிலையத்தில் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x