Published : 30 Jul 2020 08:17 AM
Last Updated : 30 Jul 2020 08:17 AM

ராஜபாளையத்தில் கரோனாவால் உயிரிழந்த மக்களின் மருத்துவர்: தன்னலமற்ற சேவையால் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்

மருத்துவர் சாந்திலால்

விருதுநகர்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராஜபாளையத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் இறந்தார். அவரது பிரிவை தாங்க முடியாமல் பொதுமக்கள் பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயில் தெருவைச்சேர்ந்தவர் மருத்துவர் சாந்திலால் (67). மதுரையைச் சேர்ந்த இவர், ராஜபாளையத்தில் 40 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்தார். இவரது மனைவிசுந்தரி. கடந்த 2015-ல் மாரடைப்பால் இறந்தார். இவர்களது ஒரே மகள் சுப்ரியா, திருமணமாகி அமெரிக்காவில் வசிக்கிறார்.

கரோனா தொற்று

இந்நிலையில், மருத்துவர் சாந்திலாலுக்கு கடந்த 10-ம் தேதிமூச்சுத்திணறல் ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் திருப்திஇல்லாததால் கடந்த 14-ம் தேதிமதுரையில் தனியார் மருத்துவமனையில் மருத்துவர் சாந்திலால் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமானதால், மீண்டும் கடந்த 16-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். இதையடுத்து மதுரையிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சமூக சேவையில் நாட்டம்

மருத்துவர் சாந்திலால் சமூக சேவையில் அதிகம் ஈடுபடுத்திக் கொண்டவர். அதோடு, ஏழை, எளியோருக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்ததால் மக்களின் பாசத்துக்குரியவராக திகழ்ந்தார். அதனால் அவரை ‘மக்களின் மருத்துவர்’ என்றே அழைத்தனர். கலை இலக்கியக் கூட்டங்களுக்கு தனது மருத்துவமனை வளாகத்திலேயே இடமும் அளித்தார்.

தனது மனைவி இறந்தபின், அவரது நினைவாக மருத்துவமனையில் நூலகத்தை அமைத்தார். அதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் அண்மையில் திறந்து வைத்தார்.

இலக்கியத்திலும் ஆர்வம்

மேலும், மதிமுக பொதுச் செயலர் வைகோ நடைபயணம் மேற்கொண்டபோது, அவருடன் சென்று சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது. இது தவிர தமிழ் இலக்கியத்திலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது.

ஏழைகளுக்கு மனிதாபிமான முறையில் சிகிச்சை அளித்தவர். தன்னலமற்ற சேவையால் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்த சாந்திலாலை கரோனா வைரஸ் பிரித்து விட்டதால் ராஜபாளையம் சுற்று வட்டார பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x