Published : 29 Jul 2020 10:21 AM
Last Updated : 29 Jul 2020 10:21 AM

கரூர் மாவட்டத்தில் இரு கிராமங்களில் தலா 9 பேர் உள்ளிட்ட 29 பேருக்குக் கரோனா

பிரதிநிதித்துவப் படம்

கரூர்

கரூர் மாவட்டத்தில் இரு கிராமங்களில் தலா 9 பேர் உள்ளிட்ட 29 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்றுப் பரவல் அண்மையில் இரட்டை இலக்கமாக உயர்ந்த நிலையில், முதன்முறையாக இன்று (ஜூலை 29) ஒரே நாளில் கரூர் மாவட்டத்தில் 29 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டு தொற்று உச்சத்தை எட்டியுள்ளது.

இதில் பஞ்சப்பட்டி அருகேயுள்ள கொமட்டேரி, தோகைமலை ஒன்றியம் கீழவெளியூர் ஆகிய இரு கிராமங்களில் தலா 9 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் கொமட்டேரியில் தொற்று ஏற்பட்டவர்களில் 6-7 பேர் கொசுவலை, ஜவுளி உற்பத்தி ஏற்றுமதி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்.

மேலும், கரூர் நகராட்சி வெங்கமேடு பகுதியில் 6 பேருக்கும், குளித்தலை அருகேயுள்ள இரும்பூதிபட்டியில் இருவர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த மூவர் என அதிகபட்சமாக ஒரே நாளில் 29 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்று ஏற்பட்ட 29 பேரும் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 97 பேர், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேர் என 107 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் புதிதாக தொற்று ஏற்பட்ட 29 பேரால் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதர மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேரையும் சேர்த்து மொத்தம் 136 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x