Published : 28 Jul 2020 10:52 AM
Last Updated : 28 Jul 2020 10:52 AM
மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்பாக மத்திய அரசு உடனடியாக 'சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு - 2020' - ஐ திரும்பப்பெற வேண்டும் என, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, சரத்குமார் இன்று (ஜூலை 28) வெளியிட்ட அறிக்கை:
"சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ன்கீழ் 1994-ல் நடைமுறைக்கு வந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சட்டம் ஏற்கெனவே திருத்தம் செய்யப்பட்டு தற்போது சூழலியல் தாக்க மதிப்பீடு - 2006 செயல்பாட்டில் உள்ள நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள 'சூழலியல் தாக்க மதிப்பீட்டு சட்டத்திருத்த வரைவு - 2020' தேவையற்றது என்றே தெரிகிறது. தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும், எந்த அளவுக்கு மக்களை பாதிக்கக்கூடும் என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு - 21 அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை (Right to Life), சுதந்திரம், பாதுகாப்பு அளிக்கிறது. வெளிநாடுகளில் (Consensus) மக்களின் ஒருமித்த கருத்தை பெற்ற பின்னரே அரசின் எந்தவொரு திட்டங்களும் செயல்பாட்டுக்கு வரும். அதுபோல, இந்தியாவில் முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பாக பொது வாக்கெடுப்பு (Referendum) நடத்த வேண்டும் என பலமுறை தெரிவித்துள்ளேன்.
மக்களுக்கு சட்டத்திருத்தத்தின் சாதக, பாதகங்கள் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்திய பின்னர், மக்கள் விரும்பினால் அதற்கு சட்டவடிவாக்கம் கொடுப்பதே ஜனநாயகத்தின் மாண்பாக இருக்கும்.
அப்படி இருக்கையில், 'சூழலியல் தாக்க மதிப்பீடு - 2020' சட்டத்திருத்தத்தில் பொது கருத்துக்கேட்பை தடை செய்தும், கால அவகாசத்தை 20 நாட்களாக குறைத்தும், சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையின்றி திட்டத்தை துவங்கவும், விரிவாக்கவும் அனுமதித்தும், திட்டம் செயல்படுத்தபட்ட பின் குழு ஆய்வு செய்யும் என்றும், சதுப்புநில காடுகளில் மணல் போட்டு சமன்படுத்த அனுமதி வேண்டாம் என்றும், வறண்ட புல்வெளிக்காடுகளை தரிசு நிலமாக எடுத்து தொழிற்சாலைக்கு திறந்துவிடப்படும் என்றும், பெரு நிறுவனங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்த்து தனிநபர் நீதிமன்றம் செல்ல முடியாது என்றும் பல திருத்தங்களை மேற்கொண்டு வெளியான வரைவு தேவையற்றது என்பதை அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.
இக்கட்டான கரோனா சூழலில், மக்கள் பொருளாதார பின்னடைவால் வேதனையுற்றிருக்கும் சமயத்தில், இச்சட்டத்திருத்தத்தின் மீது கருத்து தெரிவிக்க ஆகஸ்டு 11 வரை குறைந்த கால அவகாசம் தான் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், உயர் நீதிமன்றம் 22 மொழிகளில் மொழிமாற்றம் செய்து வரைவினை வெளியிட வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு இன்று வரை செயல்படுத்தவில்லை.
மனித சமூகம் ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்வதற்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலும், இயற்கையுடன் இணைந்த அமைதியான வாழ்க்கையும் மிக அவசியம். நடைமுறையில் உள்ள சூழலியல் தாக்க 2006 சட்டத்திருத்தத்தை ஒழுங்குப்படுத்தி வழிமுறைகளை முறையாக பின்பற்றினாலே இயற்கை வள பாதுகாப்பும், தொழில் முன்னேற்றமும் ஒருசேர அமையும். வெளிப்படைத்தன்மையுடன் மக்கள் பணி செய்வதையே அரசு தலையாய கடமையாக ஏற்க வேண்டுமே தவிர, ஜனநாயகத்தின் மாண்பான மக்களின் கருத்துரிமையை பறிக்கும் செயல் அரசியலமைப்புக்கு முரணானது.
மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கும் போது, உடல் சீராக இருப்பதற்கான அளவையும், உடல் தற்போது கொண்டுள்ள அளவையும் தெளிவாக பிரித்துக் காட்டுவதை போல, சூழலியல் வல்லுநர்களை கொண்டு தொழிற்சாலை நிறுவப்படும் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை முறையாக கணக்கிட்டு அப்பகுதி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தெளிவாக குறிப்பிட்டு தொழிற்சாலையில் குறிப்புப்பலகை வைத்திருந்தால் அப்பகுதி மக்களின் ஐயம் நீங்கும் அதேவேளையில், தொழிற்சாலையும் சிறப்பாக இயங்க முடியும்.
வரைமுறைப்படுத்தப்பட்ட செயல்முறையை 14 வருடங்களாக பயன்படுத்தி வந்த போதும், பல இயற்கை வளங்களை இழந்து குடிநீருக்கும், சுத்தமான காற்றுக்கும் தற்போது போராடி வருகிறோம். இந்த நிலையில், இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வருங்கால சந்ததியினர் உயிர் வாழ்வதற்கு தேவையான பல இயற்கை ஆதாரங்களை நாம் இழக்க நேரிடும் என்ற ஐயம் அனைத்து தரப்பினரிடமும் உள்ளது.
எனவே, இந்தியாவில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த, தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு விரும்பினால், அந்நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளித்தும், இன்னும் பிற வசதிகளையும், சலுகைகளையும் வழங்கியும் ஊக்குவிக்கலாமே தவிர, அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளை சிதைக்கும் வகையில் மாநில சுயாட்சி அதிகாரத்தை பறிப்பதையும், பொதுமக்களின் கருத்து, ஒத்துழைப்பின்றி திட்டங்களை செயல்படுத்துவதையும், பசுமை தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரத்தை நீர்த்து போகச் செய்யும் வரைவு சட்டதிருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த சட்டத்திருத்த வரைவை எதிர்த்து மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்பாக மத்திய அரசு உடனடியாக 'சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு - 2020' - ஐ திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்"
இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT